முனைவர் ச குப்பன்
கடந்த ஜூலை 2022 மாதம் முதல், இந்திய(மத்திய) அரசு கச்சா எண்ணெயின்மீது ‘எதிர்பாராத இலாபம் (windfall gains) ‘ என்ற பெயரில் கலால் வரி போன்ற கூடுதலாக மற்றொரு பெரியவரியை எதிர்நீ்ச்சலிடும் (upstream) நிறுவனங்களுக்கு விதிக்கத் தொடங்கியுள்ளது.
உண்மையில் இவ்வாறு விதிக்கப்பட்ட வரி டன் ஒன்றுக்கு ரூ.23,250/- அல்லது பீப்பாய் ஒன்றுக்கு $46 டாலர்கள் என்பதில் இருந்தே இந்திய அரசாங்கம் காட்டும் பேராசையின் அளவைப் புரிந்து கொள்ளலாம்!
அந்நேரத்தில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு சுமார் $110 டாலர்களாக இருந்தது ஆனால் இந்தியாவில் உள்ள பெட்ரோலிய நிறுவனங்களி்ன் விற்பனை விலை சராசரியாக பீப்பாய் ஒன்றுக்கு $92 டாலர்கள் மட்டுமேயாகும்.
நிறுவனங்களின் அபரீத இலாபத்தில் 50% தொகையை ‘எதிர்பாராத இலாபம்’ என்ற பெயரில்எடுத்துக் கொள்ள இந்திய அரசாங்கத்திற்கு உரிமை உண்டு என்று நாம் கருதினாலும்,
இந்த பீப்பாய் ஒன்றுக்கு $92 டாலர்கள் எனும் விற்பனை விலையில் அரசாங்கத்தின் பார்வையில் பீப்பாய் ஒன்றுக்கு $46 டாலர்களை எதிர்பாராத இலாபத்தின் மீதான வரியாக விதிக்கப் படுவதால் அந்த ‘ எதிர்பாராத இலாபத்தின் மீதானவரி’ போக மிகுதி கச்சா எண்ணெயின் கொள்முதல் விலையானது பீப்பாய் ஒன்றுக்கு பூஜ்யமாகிவிடுகின்றது. !
2020ஆம் ஆண்டில் மார்ச்மாதம் முதல் மே மாதம் வரையில் லிட்டர் ஒன்றிற்கு பெட்ரோல் மீது 13 ரூபாயும் டீசல்மீது 16 ரூபாயும் கலால் வரியை இந்திய அரசாங்கம் மிககொடூரமான வகையில் உயர்த்தியது, அப்போது கச்சா எண்ணெய் வரலாறு காணாத வகையில் மிகவும் குறைவாக பீப்பாய் ஒன்றுக்கு $20 டாலர்களாக இருந்தது, ஆனால் நடப்பு 2022ஆம் ஆண்டு மே மாதத்தில் கச்சா எண்ணெய் விலையானது பீப்பாய் ஒன்றுக்கு $110 டாலர்களாக மீண்டும் உயர்ந்துவிட்டது.
எனவே, ஒருபுறம் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்று $110 டாலர்கள் எனும் மிகவும் உயர்ந்த நிலையில் எரிபொருட்கள் மீது முன்பு 2020 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட கூடுதலான கலால் வரியானது தொடர்ந்து விதிக்கப்பட வேண்டுமா எனும் கேள்வி இயல்பாக நம்மனைவரின் மனதில் எழுகின்றது,
அதே நேரத்தில் நிறுவனங்கள் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்த அதே விகிதத்தில், அதாவது பீப்பாய்ஒன்றுக்கு $110 டாலர்கள் என்ற அளவு ‘ எதிர்பாராத இலாபத்தை’ சம்பாதித்துக் கொண்டி ருக்கின்றனவா! என்ற ஐயமும் நம்மனதில் எழுவது இயற்கைதான்.
பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரி ‘குறைத்ததனால்’ அரசாங்கத் திற்கு ஏற்படும் நட்டத்தை ஈடுகட்ட இந்த ‘எதிர்பாராத இலாப வரி’ விதிக்கப்பட்டது என இந்த ‘எதிர்பாராத இலாப வரி’க்கான சமாதானம் இந்திய அரசால் கூறப்படுகின்றது.
பெட்ரோலியபொருட்களின் மீதான கலால் வரி எவ்வளவு குறைக்கப்பட்டது அதனால் இந்திய அரசிற்கு எவ்வளவு நட்டம் ஏற்பட்டது? எனும் கேள்வி நம்மனதில் எழுமல்லவா
உண்மையில் 2020ஆம் ஆண்டில் கச்சா எண்ணொயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு $20 டாலர்களாக குறைந்த போது பொதுமக்களுக்கு அந்த ஆதாயம் கிடைக்கக்கூடாது அரசங்கத்திற்குதான் அவ்வாறு கச்சா எண்ணையின் விலை குறைந்ததால் ஏற்படும் ஆதாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக உயர்த்தி விதிக்கப்பட்டதே அவ்வாறான கூடுதல் கலால் வரியாகும் அதனை திரும்பப் பெறுவதால் எவ்வாறு இந்திய அரசிற்கு நட்டமேற்படும்?.
பொதுமக்களாகிய நாமே சிந்தித்தால் அதன் உண்மைநிலை தெளிவாகும், இந்திய அரசுகூறும் தற்போதைய நட்டம் என்பது அரசாங்கத்தால் பிரச்சாரம் செய்யப்பட்டவாறு கலால் வரியை ‘குறைத்ததால்’ ஏற்பட்டது அன்று. பொதுமக்களுக்கு கச்சா எண்ணெய் விலைக்குறைப்பால் ஆதாயம் எதுவும் கிடைக்ககூடாது அரசாங்கத் திற்குதான் அந்த இலாபம் கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் கூடுதலாக உயர்த்திய கலால்வரி மீண்டும் குறைக்கப் பட்டது என்பது உண்மையில் மத்திய அரசிற்கு நட்டமன்று கிடைத்த இலாபத்தில் இழப்பு மட்டுமேயாகும்.
உண்மையில் 2020 மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் எரிபொருட்கள் மீதான கலால் வரியை உயர்த்திய நேரத்தில், கச்சா எண்ணெயின் குறைந்த விலையின் பயனை அரசாங்கம் பெற இது ஒரு தற்காலிக வரி என்று அப்போது இந்திய அரசால் கூறப்பட்டது. ஆனால் பின்னாளில் அது அரசாங்கத்தின் நிரந்தர உரிமையாக மாறிவிட்டது. அதனோடு தற்போது பெட்ரோலியத் தொழிலின்மீது மேலும் கூடுதலாக ‘ எதிர்பாராத இலாபத்தின்மீதான’ மற்றொரு வரியை நிரந்தரமாகச் சேர்த்திருப்பதை அரசாங்கத்தின் நோக்கத்திலிருந்து ஊகிக்க முடிகிறது.
அதாவது இந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்திகொள்கின்ற பெட்ரோலிய எரிபொருட்களின் விலையில் சுமார் 70-75% அரசாங்கங்களுக்கு பல்வேறு வரிகளாகவும் தற்போது புதியதாக கட்டாயப் படுத்தப் பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘எதிர்பாராத இலாபத்தின் மீதான வரி’ உள்ளிட்ட வரிகளாகவும் செலுத்துகின்றனர். ஆயினும் இந்தியா இன்னும்கூட ஒரு ‘சோசலிச’ நாடு என அழைக்கப்படுகின்றது.
2020 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய்விலை பீப்பாய்ஒன்றுக்கு $20 ஆகக் மிகக்குறைந்திருந்த நிலையில், எதிர்நீச்சலிடும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்திச் செலவைக் காட்டிலும் குறைந்த விலையில் பெட்ரோலிய பொருட்களை விற்று பெரும் நட்டத்தைச் சந்தித்தபோது, அவர்களின் இழப்பை ஈடுகட்ட இந்திய அரசாங்கம் எதுவும் செய்ய வில்லை.
இந்தியாவில் எரிவாயுவின் விலை ஒரு mmbtu க்கு $1.79 என நிர்ணயிக்கப்பட்டபோது, இந்நிறுவனங்கள் இயற்கை எரிவாயுவின் விற்பனையினால் பெரும் நட்டத்தைச் சந்தித்தன, ஆனால் அரசாங்கம் ஒருபோதும் மீட்பராக வரவில்லை. ஆனால் உற்பத்தி செலவுகளை ஈடுகட்டுவதற்காக விலைகள் உயர்த்தியவுடன், ‘எதிர்பாராத இலாபம்’ என்ற பெயரில் அடக்குமுறையில் புதியவரிகளை கூடுதலாக விதிக்க மத்திய அரசாங்கமானது மிகவிரைவாக செயல்பட்டது.
அதனால், இந்த எதிர்நீச்சலிடும் நிறுவனங்கள் நட்டத்தை சந்திக்கும் போது,அதை இந்நிறுவனங்களின் பங்குதாரர்கள் சுமந்தனர். ஆனால் இந்த எதிர்நீச்சலிடும் நிறுவனங்கள் இலாபம் ஈட்டத் தொடங்கியவுடன், பங்குதாரர் களுக்கு கிடைக்கவேண்டிய இலாப பகிர்வினை அவர்களுக்கு கிடைக்காமல் செய்வதற்காக இந்திய அரசானது உடனடியாக விரைந்து ‘எதிர்பாராத இலாபம்’ எனும் பெயரில் கிட்டத்தட்ட கிடைக்கப்போகும் இலாபம் முழுவதையும் தானே வசூலித்துகொள்ள முன் வந்துவிட்டது.
அதாவது எண்ணெயின் விலை அதிகமாக இருந்தாலும் சரி, குறைவாக இருந்தாலும் சரி, பொதுமக்களும் எதிர்நீச்சலிடும் நிறுவனங்களின் பங்குதாரர்களும் மட்டும் தான் பாதிக்கப்படுவார்கள், ஆனால் மத்திய அரசானது தனக்கான வருமானத்தினை எப்போதுமே விட்டுகொடுக்காது தொடர்ந்து தக்கவைத்துகொண்டு தன்னை வளப்படுத்திகொள்கின்றது என்பதே உண்மையான இந்திய அரசின் கொள்கையாகும் .
எடுத்துகாட்டாக, ஏப்ரல் 2020 இல் கச்சா எண்ணெய்விலை பீப்பாய் ஒன்றுக்கு $20 டாலர்கள் என்ற மிககுறைவாக இருந்த நேரத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தியாளரான ஓஎன்ஜிசி யின் ஒரு பங்கின் விலை ரூ.50 ஆக இருந்தது.
அதன் பிறகு, இந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கச்சா எண்ணெயின்விலை $139 டாலர்களாகக உயர்ந்தது. அதே நேரத்தில், இயற்கை எரிவாயுவின் விலை ஒரு mmbtu $1.79ல் இருந்து $8.57 என்றவாறு 379% அதிகரித்தது. ஆனால் இவ்வாறான பெட்ரோலிய பொருட்களின் அபரிமிதமான விலையால் பங்கு விலை ஒன்றும் ஏறவும் இல்லை இறங்கவும்வில்லை.
மார்ச் 2022 இல் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்ஒன்றுக்கு சுமார் $112 ஆக இருந்தபோது ONGC இல் மத்திய அரசு 1.50% பங்குகளை வைத்துள்ளநிலையில் ஒரு பங்கின்விலை ரூ.159ஆகஇருந்தது. அதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் அதே அளவில் இருந்தபோது மத்திய அரசானது ‘எதிர்பாராத இலாபத்தின்மீதான வரியை’ விதித்தது, ஆனால் இந்த கடுமையான வரி விதிப்பால், ஜூலை2022 இல் ஒரு பங்கின் விலை ரூ.120 ஆக குறைந்துவிட்டது.
இறுதியில், இந்திய அரசாங்கம் ஒரு இறையாண்மையை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் தனது வரிவிதிப்பு அதிகாரங்களை கொண்டு சிறுபான்மை பங்குதாரர்களின் செலவில் (நட்டத்தில்) தன்னை வளப்படுத்திக் கொள்வது பெருநிறுவன நிர்வாகக் கொள்கைகளை கடுமையாக மீறுவதாகும்.
இந்த வரிவிதிப்பிற்கு இந்திய அரசு கூறும் ‘கோவிட் பாதிப்பிற்குப் பிறகு ‘பொருளாதார மந்தநிலையால்’ இழந்த வருவாயை ஈடுகட்ட அரசிற்கு போதுமான நிதி தேவையாகும் ‘ என்ற அரசாங்கத்தின் வாதம் ஏற்கத் தக்கது அன்று.
ஜூலை 2022ல் ஜிஎஸ்டி வருவாயானது டிசம்பர் 2019 ஐ (கோவிட் தொடங்குவதற்கு சற்று முந்தைய) விட 45% அதிகரித்துள்ளது. இதேபோன்று, 2021-22ல் நேரடி வரிவருமானம் ரூ. 14 லட்சம் கோடியுடன் ஒப்பிடும் போது 2019-20ல் (கோவிட் பாதித்த ஆண்டு)ரூ. 10.50 லட்சம் கோடி, இரண்டு ஆண்டுகளில் 34% வளர்ச்சியடைந்துள்ளது.
உலகிலேயே எந்த ஒரு அரசாங்கத்திற்கும் இந்தக் காலக்கட்டத்தில் இதுவே மிக உயர்ந்த வருமான வளர்ச்சியாகும்.
கடந்த 90 நாட்களில், அரசாங்கம் கூர்மையான திருத்தத்திற்குப் பிறகு கச்சா எண்ணெயின் மீதான விலை டன்ஒன்றிற்கு ரூ. 8,000 ஆக குறைத்தது ,ஆனால் அதை முழுமையாக நீக்கம் செய்யவில்லை.
இன்று, எதிர்நீச்சலிடும் நிறுவனங்களின் சராசரி வருவாய் பீப்பாய் ஒன்றுக்கு சுமார் $75டாலர்களாகும். இதில், அரசாங்கம் பீப்பாய் ஒன்றுக்கு $16 டாலர்கள் எதிர்பாராத இலாப வரியாக எடுத்துக் கொள்கிறது, அதனால் சாதாரணமாக கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்ஒன்றுக்கு $43டாலர்கள் என்றவாறு மட்டுமே இருக்கவேண்டும்!
எதிர்நீச்சலிடும் நிறுவனங்கள் மட்டுமல்ல, பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களும் (HPCL, BPCL, IOC) மிக மோசமாக பாதிக்கப் பட்டுள்ளன. இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்து சாதனை இழப்பாக ஜூன் 2022உடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.18,480 கோடிஆகும். ஏன்?
கச்சா எண்ணெய் விலை உயர்வாக இருந்தது பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியும் மிக அதிகமாக உயர்ந்து இருந்தது. இந்திய அரசு வாக்காளர்களின் கோபத்தைத் தவிர்ப்பதற்காக இந்த நிதியாண்டின் மிகுதி நாட்களுக்கு எரிபொருள் விலையை அதிகரிக்க நிறுவனங்களை அனுமதிக்கப் போவதில்லை. எரிபொருட்கள் மீதான கலால் வரியையும் குறைக்கப்போவதில்லை.
முன்பு செய்தது போன்று பெட்ரோலிய சுத்தி கரிப்பு நிறுவனங்களால் ஏற்படும் இழப்பின் ஒரு பகுதியை ஈடு செய்யுமாறு எதிர்நீச்சலிடும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்துவதே மிகுதியாக எஞ்சியிருக்கும் ஒரே வழி. மாறாக, பங்குதாரர்களுக்கு மோசமான நட்டத்தை விளைவித்து தன்னுடைய சொந்த நியாயமற்ற வருமானத்தினை தக்கவைப்பதற்காக எதிர்நீச்சலிடும் நிறுவனங்களை சுரண்ட இந்திய அரசாங்கம் முடிவு செய்துவிட்டது.
அதனால் இந்த 2022-23 நிதியாண்டின் இறுதியில் கச்சா எண்ணெயின் விலை தற்போதைய நிலையில் இருந்தால், மூன்று பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் நிகர மதிப்பின் குறிப்பிடத்தக்க பகுதி அழிக்கப்பட்டுவிடும். இந்த பெரிய இழப்புகளை சந்திக்க, இந்த நிறுவனங்கள் தங்கள் நீண்ட கால நிலைதன்மைக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அதிகமாக கடன் வாங்குகின்றன.
மிக மோசமான செய்தி என்னவென்றால், 4 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசானது HPCL இல் தான் வைத்துள்ள முழுப் பங்குகளையும் ONGC க்கு அரசாங்கம் விற்றுவிட்டது. அப்போது ஒரு பங்கின்விலை ரூ.474 மட்டுமே ஆனால் HPCL இன் தற்போதைய பங்கு ஒன்றின் விலை அதில் பாதி மட்டுமே. பாதிக்கப்பட்டது யார்?
வெளிப்படையாக கூறவேண்டுமெனில் ஓஎன்ஜிசியின் சிறுபான்மை பங்குதாரர்களே பாதிக்கப்பட்டனர். அப்போது ஓஎன்ஜிசி ஒரு பங்கின் விலை ரூ.200 கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்ஒன்றுக்கு $70டாலர்கள். இன்று கச்சா எண்ணெயின்விலை 20% விட கூடுதலாக அதிகரி்த்துள்ளது.
இன்னும், இரண்டு நிறுவனங்களும் (ONGC, HPCL) பங்கின் விலையில் 40-50% குறைவாகவே வர்த்தகம் செய்கின்றன. வெளிப்படையாக கூறவேண்டுமெனில், ONGC இன் பங்குதாரர்கள் HPCL இன் சந்தை விலையை விட 14% அதிக விலையில் விலை சுழற்சியின் உச்சத்தில் ஒரு நிறுவனத்தை (HPCL) வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தொழில் சுழற்சியின் உச்சக்கட்டத்தில் மற்றொரு பொதுத்துறை நிறுவனத்தில் (HPCL) அதன் சொந்த பங்குகளை விற்று, அதுவும் இலக்கு நிறுவனத்தின் தற்போதைய சந்தை விலையை விட 14% அதிகமாக விற்பனை செய்வதன் மூலம் ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் (ONGC) சிறுபான்மை பங்குதாரர்களை சுரண்டுவதற்காக இந்திய அரசு அதன் இறையாண்மை அதிகாரங்களைப் பயன்படுத்துவது . பெருநிறுவன நிர்வாகக் கொள்கைகளை கடுமையாக மீறுகின்ற கேலிக்கூத்தாகும்
கச்சாஎண்ணெயின் விலைஉயர்ந்திருந்தபோது இந்திய அரசாங்கம் மற்றொரு சட்டம், நெறிமுறை , வணிக சார்பு முறை ஆகியவற்றின் வாயிலாக அதிக பங்கு ஈவுத்தொகையை வழங்குவதற்கு எதிர்நீச்சலிடும் நிறுவனங்களை கட்டாயப்படுத்துவதன் மூலம் ஆதாயமடைந்திருக்கலாம். ஆனால் சிறுபான்மை பங்குதாரர்கள் ‘முதலீட்டாளர்களின் அடிப்படை உரிமை’ அதாவது இலாபத்தில் பங்கு பெறுவதை இந்திய அரசாங்கம் விரும்பவில்லை.
மாறாக, அது இந்த நிறுவனங்களின் முழு ஆதாயங்களையும் தானே அடையவேண்டும் என பல்வேறு வரிகளாகப் பறித்து கொண்டுவிட்டது. தீவிர பஜக ஆதரவாளர்களே, பெட்ரோலிய நிறுவனங்களின் முதலீட்டாளர் களுக்கும் பொதுமக்களாகிய நுகர்வோருக்கும் இவ்வாறு செயல்படுத்தப்பட்ட அநியாய செயல்களால் வருத்தமடையும் நிலை உருவாகியுள்ளது.
இந்திய அரசாங்கம் பெட்ரோலியத் தொழிலை கண்டிப்பாகக் காப்பாற்ற வேண்டும் என விரும்பினால்,உடனடியாக பல்வேறு வடிவங்களிலும் விதிக்கப்படுகின்ற ‘எதிர்பாராத இலாபத்தின்மீதான வரி’ என்பதை இரத்து செய்ய வேண்டும் மேலும் எரிபொருட்கள் மீதான கலால் வரி என்பதையும் போதுமான அளவில் குறைக்க வேண்டும்;
அவ்வாறு செய்ய வில்லையெனில் தொலைத்தொடர்பு நிறுவனங்ககள், விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் ஆகியவை அழிந்ததைப் போன்றே தொடர்ந்து பெட்ரோலியத் துறையும் மிகவிரைவில் நலிவடைவதைக் காணும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதே உண்மையான களநிலவரமாகும்.
கட்டுரையாளர் குறிப்பு
முனைவர் ச குப்பன். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்திலுள்ள பொ.மெய்யூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர்.
பள்ளி இறுதி வகுப்பு வரை மட்டுமே பயின்ற இவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் பயன்படுத்தப்படும் நிர்வாக கணக்கியல் முறை (Management Accounting Practice in Tamil Nadu Co-operative Sugar Mills) பற்றிய முனைவர் பட்ட ஆய்வைப் பகுதி நேரமாக செய்து முடித்து முனைவர் பட்டம் பெற்றவர்.
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!
கிச்சன் கீர்த்தனா : ஆப்பிள் திரட்டுப்பால்