டிஜிட்டல் திண்ணை: ரவுடி கருக்கா வினோத்தை ஏவி விட்ட பாஜக? ஆளுநருக்கு அதிகரிக்கும் நெருக்கடி!
வைஃபை ஆன் செய்ததும் ஆளுநர் மாளிகை வாசலில் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு பற்றிய அப்டேட்டுகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. அவற்றை பார்த்து விட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“அக்டோபர் 25ஆம் தேதி பிற்பகல் சென்னை கிண்டியில் அமைந்திருக்கும் ஆளுநர் மாளிகை வாசலில் கேட் நம்பர் 1 எதிரே பெட்ரோல் குண்டுகள் விழுந்து வெடிக்க தமிழ்நாடு முழுவதும் பரபரப்பானது. ஆளுநர் மாளிகை மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்தது. இது ஒரு அசாதாரண சூழலை உண்டு பண்ணுவதற்கான முயற்சியாக பார்க்கப்பட்டது.
ஆளுநர் மாளிகை முதல் கேட் அமைந்திருக்கும் சாரிக்கு எதிர் சாரியிலிருந்து அதாவது சாலையின் எதிர்ப்புறத்தில் இருந்து கருக்கா வினோத் என்ற ரவுடி வீசிய வெடிகுண்டு தான் விழுந்து வெடித்துள்ளது. கருக்கா வினோத் சாலையின் அந்தப் பக்கம் இருந்து பெட்ரோல் குண்டு வீசி இருக்கிறார். அவர் நின்ற இடம் கோட்டூர்புரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி, அவர் வீசிய குண்டு விழுந்த இடம் கிண்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி.
ஆளுநர் மாளிகை வாசலில் கிண்டி காவல் நிலையத்தில் சேர்ந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்க அவர்கள் தான் வினோத்தை பார்த்து பிடித்தனர். அதன் பேரில் வினோத் விசாரிக்கப்பட்டு நேற்று இரவே நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தமிழ்நாடு ஆளுநரின் டெபுடி செகரட்டரி செங்கோட்டையன் சார்பில் சென்னை மாநகர போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் மூன்று பக்க புகார் கொடுக்கப்பட்டது. ஆளுநர் மீது கடந்த காலங்களில் வார்த்தை ரீதியாகவும் செயல் ரீதியாகவும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஆளுநர் மீது திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. 2022 ஏப்ரல் மாதம் ஆளுநர் தர்மபுரம் ஆதீனத்துக்கு செல்லும்போது கற்களால் கம்புகளாலும் தாக்கப்பட்டார். இது குறித்து ஆளுநர் மாளிகை அளித்த புகாரை காவல்துறை வழக்காக பதிவு செய்யவில்லை,
இந்த நிலையில் 25ஆம் தேதி பிற்பகல் ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இது ஆளுநர் தனது அரசியல் சாசன கடமையை ஆற்ற விடாமல் அவரை அச்சுறுத்துவதற்கான முயற்சிகள் ஆகும். இப்படிப்பட்ட தொடர் அச்சுறுத்தலான சூழ்நிலையில் ஆளுநர் தமிழ்நாட்டில் பணியாற்ற முடியாது. இந்த புகார்களின் கீழ் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் ’என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலின் போலீஸ் உயரதிகாரிகளோடும் சீனியர் அமைச்சர்களுடன் ஆலோசித்தார்.
26 ஆம் தேதி பிற்பகல் ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில். ’ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரை வாங்காமல் போலீசார் இந்த வழக்கை நீர்த்துப்போக செய்கிறார்கள். இந்த விசாரணை ஆரம்பமாக முன்பே கொல்லப்படுகிறது’ என்ற ரீதியில் கடுமையான அரசியல் தொனியில் இருந்தது.
இது குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு ஆளுநர் மாளிகை பாதுகாப்பு குறித்து கவனமாக இருக்க அறிவுறுத்திய முதல்வர், இந்த விவகாரத்தை சட்டரீதியாக எப்படி எல்லாம் எதிர் கொள்ளலாம் என்பது பற்றியும் தீவிரமாக ஆலோசித்துள்ளார்.
இந்த நிலையில்தான் இன்று மாலை சட்ட அமைச்சர் ரகுபதி வெளியிட்ட செய்தியில், ’ தமிழ்நாடு பாஜக அலுவலகமான கமலாலயம் மீது பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்தை தற்போது ஜாமினில் எடுத்ததே பாஜக வழக்கறிஞர்தான். பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி சிறையில் இருந்த நபரை பாஜக வழக்கறிஞரே பிணையில் எடுத்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த கோணத்திலும் தமிழ்நாடு போலீஸ் இந்த விசாரணையை விரிவுபடுத்தி இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்படியாக ஆளுநர் மாளிகை முன்பு வீசப்பட்ட பெட்ரோல் பாம் அரசியல் பாமாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் ஆளுநர், தமிழக பாஜகவை விட இறங்கி அரசியல் செய்கிறார் என்பதை உணர்ந்துள்ள முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சட்ட ரீதியாக மோதி பார்க்க தயார் என்று முடிவெடுத்துள்ளதாக கூறுகிறார்கள் கோட்டை வட்டாரங்களில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜீ.வி பிரகாஷின் ரெபெல் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்..!