2018ஆம் ஆண்டு கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் மூன்று பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி திரிபுராவில் உள்ள பிலோனியா என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட லெனின் சிலை அகற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில், திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்படும் வீடியோவை வெளியிட்டு, இதுபோல தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
எச் ராஜாவின் பதிவைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி இரவு, அப்போது வேலூர் மாவட்டத்தில் இருந்த திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள பெரியாரின் சிலையை சிலர் சேதப்படுத்தினர்.
இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் திருப்பத்தூர் பாஜகவைச் சேர்ந்த முத்துராமனை கைது செய்தனர்.
இந்த சம்பவம் மார்ச் 6ஆம் தேதி இரவு நடக்க, மறுநாள் மார்ச் 7ஆம் தேதி அதிகாலை கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களான பாலன், ஜீவானந்தம், கௌதமன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் இவர்கள் மீது குண்டாஸ் வழக்கும் பாய்ந்தது.
இவர்கள் மீதான வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக கோவை ஒன்றாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று (ஜூன் 12) தீர்ப்பு வழங்கப்பட்டது.
பிற்பகல் 3 மணியளவில் நீதிபதி சசிரேகா, பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான பாலன், ஜீவானந்தம், கௌதமன் ஆகிய 3 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ. 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த உத்தரவைத் தொடர்ந்து மூன்று பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த தீர்ப்பு குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட விவகாரத்தில் பாலன், ஜீவானந்தம், கௌதமன் ஆகியோர் மீது போடப்பட்ட குண்டாஸ் வழக்கை உடைத்து மூவரும் வெளியே வந்தனர்.
இந்நிலையில் இன்று மூன்று பேருக்கும் 7 ஆண்டுகள் சிறை என்ற அதிர்ச்சிகரமான தீர்ப்பு வந்துள்ளது.
எந்த முகாந்திரத்தில் தண்டனை வழங்கப்பட்டது என்பது முழு தீர்ப்பின் நகல் கிடைத்த பின்னரே தெரிய வரும்.
உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான பணிகள் கழக வழக்கறிஞர்கள் துரைசாமி, இளங்கோவன் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விரைவில் இந்த பொய் வழக்கை உடைத்து மூன்று பேரையும் வெளியே கொண்டு வருவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
மருத்துவ பொது கலந்தாய்வு: மத்திய அமைச்சரை சந்திக்கும் மா.சுப்பிரமணியன்
ராஜேஷ்தாஸ் வழக்கு: தீர்ப்பு தேதியை அறிவித்த நீதிமன்றம்!