பெட்ரோல் குண்டு வீசியது பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா?
கோவையில் மூன்று இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் சித்தாப்புதூரில் பாஜக அலுவலகம் உள்ளது. ஒப்பணக்கார வீதியில் லெட்சுமணன் என்பவருக்கு சொந்தமான மாருதி டெக்ஸ்டைல்ஸ் துணிக்கடை உள்ளது.
இந்த இரண்டு இடங்களிலும் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நேற்று இரவு 8.40 மணியளவில் பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றனர்.
இரண்டு இடங்களிலும் பெட்ரோல் குண்டுகள் வெடிக்காததால் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
இதேபோன்று பொள்ளாச்சி பாஜக நிர்வாகிகள் வீடுகள் மீதும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது.
பாஜக மாவட்ட செயலாளர் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த சரவணன் ஆகியோரின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
அவர்களது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 2 ஆட்டோக்கள் மற்றும் 2 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட தகவல் அறிந்து பாஜகவினர் 300க்கும் மேற்பட்டோர் காந்திபுரம் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
தர்ணாவில் ஈடுபட்ட பாஜகவினரிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து நள்ளிரவு 11 மணியளவில் அவர்கள் கலைந்து சென்றனர்.
கோவை மாவட்ட துணை கண்காணிப்பாளர் தீபா சுஜிதா தலைமையில் சம்பவ இடங்களில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். காட்டூர் ஆய்வாளர் லதா உள்ளிட்ட போலீசார் ஆய்வு செய்தனர்.
அதுபோன்று, கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட மர்ம நபர்களைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
விசாரணையின் போது கிடைத்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், ஒப்பணக்கார வீதியில் துணிக்கடையில் பெட்ரோல் குண்டு வீசியதில் 6 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரிட்டிஷார் ஆட்சிகாலத்தில் பீர் பாட்டில்களில் எரியும் வகையிலான பொருட்களை நிரப்பி இந்தியர்கள் பிரிட்டிசார் மீது வீசுவார்கள். அது Molotov cocktails என்று கூறப்பட்டு வந்தது. அதுதான் தற்போது தமிழில் பெட்ரோல் குண்டாக அழைக்கப்படுகிறது.
தற்போது பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பி வெடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்து வீசியவர்கள் யார் என்ற கோணத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் என சந்தேகம் வலுத்து வருகிறது.
காரணம் ஏற்கனவே இதுபோன்ற பெட்ரோல் குண்டு வீச்சை அந்த அமைப்பினர் பலமுறை நடத்தியுள்ளனராம்.
இதனிடையே, நேற்று மாலை கோவை கணபதி பகுதியிலிருந்து கோவைப்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது மர்மநபர்கள் கல் வீசினர்.
இதுபோன்று கோவை மாவட்டத்தில் அடுத்தடுத்து ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியதால் மாவட்டம் முழுவதும் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகம், சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ் அலுவலகம், சிந்தாதிரிப்பேட்டை இந்து முன்னணி தலைமை அலுவலகம் ஆகிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாஜக தலைவர் ஜே.பி.நட்டா இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள சூழ்நிலையில், பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம், டெல்லி அதிகார வர்க்கத்திலும் அதிர்வுகளை உண்டாக்கியுள்ளன.
கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கோயம்புத்தூர் கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி எங்கள் சகோதர சகோதரிகளின் மன தைரியத்தை குறைத்து விடலாம் என்று யாரும் நினைத்து விட வேண்டாம்.
இது போன்ற அச்சுறுத்தல்கள் சமூக விரோதிகளுக்கு எதிரான எங்கள் சமூக பணியை மேலும் வேகப்படுத்தும்.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை திமுக அரசு உணர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
டிஜிட்டல் திண்ணை:சீனியர்களுக்கு மாற்றுப் பதவிகள்! சபரீசன் வைக்கும் புது செக்!