தாமரை தேசிய மலர் எனவும், மத முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் கூறி பாஜகவிற்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து அஹிம்சா சோசியலிஸ்ட் கட்சி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து இன்று (மார்ச் 20) சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அஹிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் தலைவரான ரமேஷ் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், “1968ஆம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் ஆணையின் 6 மற்றும் 6A வகுப்பின்கீழ் பாஜக பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சி.
அந்த கட்சிக்கு நிரந்தர சின்னமாக தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும்போது தாமரை ஒரு தேசிய மலர் என்பதையும், கர்நாடகா மற்றும் ஹரியானாவில் மாநில மலர் என்பதையும் தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டது.
பண்டைய புராணங்களில் உள்ள குறிப்புகள் காரணமாக தாமரை புனிதமாக கருதப்படுகிறது. இந்து, பெளத்தம், சமணம் மற்றும் சீக்கிய மதங்களில் தாமரை மலர் ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில், பாஜகவிற்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டது, இந்தியாவின் மாநில சின்னம் சட்டம், 2005இன் பிரிவு 3 மற்றும் 4 ஐ மீறுவதாகும்.
மேலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 123, மதச் சின்னங்களைப் பயன்படுத்தி வாக்குகளைக் கேட்பதைத் தடை செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், பாஜகவிற்கு வழங்கப்பட்டுள்ள தாமரை சின்னத்தை ரத்து செய்யவேண்டும். மேலும், இதனை இந்திய தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, பரத சக்கரவர்த்தி அமர்வு “பாஜகவின் சின்னமான தாமரை தேசிய மலர் மற்றும் மத அடையாள சின்னம் தான்.
இருந்தும், தற்போது பாஜகவின் சின்னம் தாமரை என்பதை மக்கள் அறிந்துள்ளனர்.
இதன் காரணமாக, பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட தாமரை சின்னத்தை ரத்து செய்வதற்கான மனுவை இந்திய தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டியது இல்லை.
பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள தாமரை சின்னத்தை ரத்து செய்யக்கோரிய இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.” என உத்தரவு பிறப்பித்தனர்.
-இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Honor Band 9: கம்மி விலை, நீடித்த பேட்டரி… உண்மையிலேயே செம ஸ்மார்ட்!