உத்தவ் தாக்கரே வழக்கு : தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்!

Published On:

| By Kavi

சிவசேனா கட்சி சின்னம் வழக்கில் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்குத் தடை விதிக்க மறுப்புத் தெரிவித்த உச்ச நீதிமன்றம் உத்தவ் தாக்ரே மனுவுக்குப் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

ஏக்நாத் ஷிண்டே அணியை அதிகாரப்பூர்வ சிவசேனாவாக இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்ரே மனு தாக்கல் செய்தார்.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் நீதிபதி ஜே.பி.பார்திவாலா ஆகியோர் கொண்ட அமர்வு முன் இந்த மனு இன்று (பிப்ரவரி 22) விசாரணைக்கு வந்தது.

ஏக்நாத் ஷிண்டே தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷன் கவுல், உத்தவ் தாக்ரே முதலில் உயர் நீதிமன்றத்தை நாடாமல் உச்ச நீதிமன்றத்தை நாடியிருப்பதாக அவரது மனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது உயர் நீதிமன்றத்துக்குச் சென்று நாங்கள் என்ன செய்வோம்?” என்று கேள்வி எழுப்பினார்.

சட்டமன்ற பெரும்பான்மையை பார்க்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு ஆட்சேபம் தெரிவித்த கபில் சிபல் சிவசேனாவின் அலுவலகம் மற்றும் கணக்குகளை ஷிண்டே குழு கையகப்படுத்துகிறது என்று கூறி இவ்வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் முடிவுக்குத் தடை விதிக்க மறுப்புத் தெரிவித்தனர்.

இந்த மனுவுக்கு ஏக்நாத் ஷிண்டே தரப்பும், தேர்தல் ஆணையமும் 2 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.

பிரியா

6 வயதில்தான் ஒன்றாம் வகுப்பு : மத்திய அரசு !

டெல்லி மேயர் தேர்தல்: ஆம் ஆத்மி வெற்றி..கெஜ்ரிவால் வாழ்த்து!