சசிகலாவுக்கு எதிரான மனு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி!

Published On:

| By Kalai

Petition against Sasikala

அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நிராகரிக்க கோரி அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொது செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின் பொது செயலாளராக சசிகலாவும், துணை பொது செயலாளராக டி.டி.வி.தினகரனும் அதிமுக பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தன்னை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தாக்கல் செய்த நிராகரிப்பு மனுக்களை ஏற்ற உரிமையியல் நீதிமன்றம், வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனக் கூறி, அவரது வழக்கை நிராகரித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்நிலையில் வழக்கின் மதிப்புக்கு ஏற்ப நீதிமன்ற கட்டணம் செலுத்த உத்தரவிட வேண்டும் எனவும், இல்லாவிட்டால் சசிகலாவின் மேல் முறையீட்டு வழக்கை நிராகரிக்க வேண்டும் எனவும் கோரி அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.சவுந்தர் முன் விசாரணைக்கு வந்த போது, பதிவுத்துறையில் சரி பார்த்த பிறகு தான் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, செம்மலையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கலை.ரா

நள்ளிரவில், முதல்வரின் பெண் செயலாளர் படுக்கை அறைவரை சென்ற அதிகாரி!

உலகின் அனைத்து பிரச்சனைகளும் எப்போது தீரும்? – நீதிபதியின் தீர்ப்பால் சலசலப்பு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel