ஆ.ராசா மீது வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி!

அரசியல்

இந்து மதம் மற்றும் இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக ஆ.ராசா மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் இன்று (அக்டோபர் 17) உத்தரவிட்டுள்ளது.

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி தி.க. தலைவர் கி. வீரமணிக்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்று பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பியுமான ஆ.ராசா,

’நீ கிறிஸ்தவனாக இல்லாமல் இருந்தால், இஸ்லாமியனாக இல்லாமல் இருந்தால், பெர்சியனாக இல்லாமல் இருந்தால், நீ இந்துவாகத் தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது.

இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கும்வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும்வரை நீ விபச்சாரியின் மகன்.

இந்துவாக இருக்கும்வரை நீ பஞ்சமன். இந்துவாக இருக்கும்வரை நீ தீண்டத்தகாதவன். இப்போது சொல்லுங்கள், எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்?

எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்? இந்த கேள்வியை உரக்கச் சொன்னால்தான் அது சனாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும்” என்றார்.

அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு ஆ.ராசாவின் கருத்துக்களுக்கு பாஜக மற்றும் இந்து அமைப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவாகியது.

இது குறித்து ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற குரல்களும் வலுத்தன. இதில் குறிப்பாக பா.ஜ.க சார்பில், மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் ஆ.ராசா மீது புகார்கள் அளிக்கப்பட்டன.

இந்த நிலையில் இந்து மதம் மற்றும் இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக ஆ.ராசா மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஜெ.ஜெ. கட்சியின் நிறுவனர் ஜோசப் என்பவர் அக்டோபர் 13 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “ஆ.ராசாவின் பேச்சு இரு மதத்திற்கு இடையே விரோதத்தை ஏற்படுத்தி, மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் உள்ளது. ராசாவின் பேச்சால் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

வழக்கத்தில் இல்லாத மனு நூல் குறித்துப் பேசி தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திய ராசா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.

ஆனால், ஆளும் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பதால் அவர் மீதான புகாரை காவல் துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

எனவே எனது புகாரின் பேரில் ஆ.ராசா மீது வழக்குப் பதிவு செய்யக் காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை இன்று (அக்டோபர் 17) உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் விசாரித்தார்.
அப்போது காவல்துறை சார்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி,

’இந்தப் புகார் உடனடியாக குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தியதில் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை. அதனால் இந்த புகார் முடித்து வைக்கப்பட்டது’ எனத் தெரிவித்தார்.

மேலும் அந்தப் புகார் முடித்து வைக்கப்பட்டதற்கான நகல் மனுதாரருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மோனிஷா

எடப்பாடி புறக்கணிப்பு: சபாநாயகர் விளக்கம்!

காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடங்கியது!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *