தமிழ்த் தேசியத்தந்தை’ என்று போற்றப்படும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் 28 ஆம் ஆண்டு ‘நினைவேந்தல்’, ‘படத்திறப்பு’ நிகழ்ச்சி நேற்று (ஜூன் 11) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி, “பாவலரேறுக்கு மிக பெரிய துணிச்சல் இருந்தது. அதை யாராலும் செய்ய முடியாத துணிச்சல். கலைஞருக்கும் பாவலரேறுக்கும் மன வேறுபாடு வருகிறது. தனி தமிழ்நாடா மாநில சுயாட்சியா என பிரச்சினை வருகிறது.
கலைஞரிடம் போய் பெருஞ்சித்திரனார் சொன்னதை சொன்னார்கள். பெருஞ்சித்திரனாரிடம் வந்து கலைஞர் சொன்னதை சொன்னார்கள். ஒரு கட்டத்தில் கலைஞரின் கருத்துக்கு இவர் உடன்படவில்லை.
அப்போது பெருஞ்சித்திரனார், ‘இன்றைய தமிழனின் தலைமைக்கு லட்சிய தெளிவு இல்லை, ஆனால் இவரை விட்டால் தமிழனுக்கு எதிர்காலத்தில் தலைவரும் இல்லை’ என்று கலைஞரை மையப்படுத்தி சொல்கிறார்.
இப்படி சொன்னவரின் படத் திறப்பு விழாவுக்கு கலைஞர் வருகிறார். அந்த விழாவில் ‘எனக்கும் பாவலரேறுக்கும் நல்லுறவு உண்டு. கசப்பான உறவும் உண்டு. அந்த கசப்பு பாகற்காய் போன்றது. இந்த பாகற்காய் உடலுக்கு நல்லது என்று அவருக்கும் தெரியும், எனக்கும் தெரியும். என்னுடைய கசப்பை அவர் மதித்தார். அவருடைய கசப்பை நான் ஏற்றுக்கொண்டேன்’ என்றார் கலைஞர்” என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “திராவிட இயக்கமும், தனித்தமிழ் இயக்கமும் தனி தனியாக இயங்கினாலும் அது சந்தித்துக் கொண்ட புள்ளியில் பாவலரேறு உயர்ந்து நிற்கிறார்.
ஒரு மனிதனின் வாழ்க்கை வெளிப்படையாக இருக்கிறது என்று சொன்னால் பெரியாருக்கு இணையாக பாவலரேறும் இருக்கிறார்.
1967ல் ஆட்சிக்கு வந்த போது பாவலரேறு, ‘தமிழனின் வீழ்ச்சிக்கு அரசியல் காரர்களும், சமுதாய சீர்திருத்த காரர்களும் எத்தனையோ காரணங்களை தத்தம் வரலாற்று அறிவுக்கு ஏற்ப கூறினாலும்… உண்மையான காரணங்கள் இரண்டு, தமிழனின் சமுதாய சரிவு, தமிழனின் மொழி சரிவு. இவ்விரண்டு சரிவுகளும் ஆரியர்கள் என்று இந்த மண்ணிற்கு வந்து காலடி வைத்தார்களோ அன்றே தொடங்கிவிட்டது.
இச்சரிவை தடுப்பதற்கு தடுப்பு சுவர் கட்ட தமிழன் 300 ஆண்டுகளாக முயன்றான். ஆரியத்தால் ஏற்பட்ட சரிவை ஆரியத்தை கொண்டே சரி செய்ய முயன்றதால் தோற்றான். முதல் சரிவை கண்டு காட்டியவர் பெரியார். இரண்டாவது சரிவை காட்டியவர் மறைமலை அடிகள்’ என்று சொல்கிறார்.
ஆட்சிக்கு திமுக வந்த பிறகு நாமெல்லாம் மாநில சுயாட்சி என்று ஆரம்பித்துவிட்டோம். கலைஞர் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது மாநில சுயாட்சி உடனே வரும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் என்றோ ஒருநாள் வரும். அதற்கான காரணத்தை நாம் இன்று சட்டமன்றத்தில் விதைத்திருக்கிறோம் என்றார்.
அப்போது பாவலரேறு, ‘இந்தியா ஒன்றாக இருக்கும் வரை இந்து மதம் இருக்கும். இந்து மதம் இருக்கும் வரை தமிழர்களும் இந்துவாக இருக்க வேண்டும். தமிழர்கள் இந்துவாக இருக்கும் வரை மத பூசல்களும் , குல, சாதி கொடுமைகளும் அவர்களை விட்டு விலகாது. இது விலகாத வரை ஆரிய பார்ப்பனரின் வஞ்சகத்தில் இருந்தும் மேல் ஆளுமையில் இருந்தும் தமிழன் மீளவே முடியாது.
அத்தகைய பார்ப்பனிய பிடிப்பில் இருந்து தமிழன் மீளாத வரை தமிழ்மொழி தூய்மை பெறாது. தமிழினம் தலை தூக்காது. தமிழ்நாடு தன்னிறைவு அடைய முடியாது. எனவே இந்து மதத்தில் இருந்தும், மத பூசலில் இருந்தும், ஆரிய பார்ப்பனியத்தில் இருந்தும் விடுபட வேண்டுமானால் நாம் இந்திய அரசியல் பிடியில் இருந்து விலகப்பட வேண்டும். தமிழக விடுதலை தான் நம் முழு மூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி என்று தமிழர் ஒவ்வொருவரும் உணர்த்த வேண்டும்’ என்று எழுதுகிறார்.
கலைஞர் மாநில சுயாட்சி கொண்டு வரும் போது எல்லா தமிழர்களும் இந்து மதத்தை விட்டு வெளியே வர வேண்டும் என்று எழுதுகிறார். அப்படிப்பட்ட பெருஞ்சித்திரனார் இன்று தேவைப்படுகிறார்.
1972ல் திருச்சியில் நடந்த தென்மொழி கொள்கை செயல்பாட்டு மாநாட்டில் பேசிய பெருஞ்சித்திரனார், ‘தமிழகம் இந்திய அரசியலில் இருந்து பிரியாமல் இருக்குமானால் தமிழ்மொழி உயர்வடைய வழியில்லை. பலவகையிலும் முட்டுக்கட்டை இருக்கும். இந்தியை விலக்கவே முடியாது. என்றைக்கேனும் ஒரு நாள் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.
ஆரிய பார்ப்பனரின் நச்சுத் தன்மை இருந்துகொண்டே இருக்கும். தமிழ் பண்பு படிப்படியாக கெடும். தமிழ் மொழியின் இலக்கிய இலக்கணம் அழியும். சமஸ்கிருதம் தலையெடுக்கும். தமிழினம் மேலும் சிதறுண்டு போகும். பொதுவுடமை அரசமைப்புக்கு வழியே இல்லை. அரசியல் அதிகாரங்கள் தன்னிலை பெறாது’ என்கிறார்.
இப்படி பெருஞ்சித்திரனார் அன்றைக்கு கொடுத்த கருத்தும் எச்சரிக்கையும் இன்றைக்கும் தொடர்கிறதா? இல்லையா?. இன்றைக்கு காவியை விரட்ட அவர் தேவைப்படுகிறார்” என்று தனது உரையில் கூறினார் ஆ.ராசா.
பிரியா
“ரத்தத்தை கொட்டியாவது கலைஞருக்கு பேனா சிலை அமைப்போம்” – ஜெகத்ரட்சகன்
பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: மூவருக்கு சிறை!