தந்தை பெரியார் என்ற பெயருடன் அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமியின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதியை ஆண்டுதோறும் சமூக நீதி நாளாக தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது.
அதன்படி இன்று அவரது 146வது பிறந்தநாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள், மேயர், திமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஆகியோரும் சென்று மரியாதை செலுத்தினர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியாரின் சிலைக்கு கட்சி நிர்வாகிகளுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதேபோன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பெரியாரின் திருவுருவ சிலைக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டின் இன்றைய தேவை!
பாமக தலைவர் ராமதாஸ் தனது எக்ஸ் தள பதிவில் “பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியாரின் 146-ஆம் பிறந்தநாள் இன்று. சமூகநீதி வரலாற்றில் மிகவும் முக்கியமான இந்த நாளில் தான் வன்னிய மக்களுக்கு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான தொடர்சாலை மறியல் போராட்டம் இன்று தான் தொடங்கியது. தமிழ்நாட்டின் இன்றைய இன்றியமையாத் தேவைகள் சமூகநீதியும், சுயமரியாதையும் தான். அவற்றை போதித்தவர் தந்தைப் பெரியார் அவர்கள் தான். அவரது பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குவதுடன் சமூகநீதியையும், சுயமரியாதையையும் வென்றெடுக்க இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்” என தெரிவித்துள்ளார்.
பெரியார் பாதையில் பயணிப்போம்!
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தனதுஅறிக்கையில், “சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர். மக்களைப் பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர். சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு. சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்!” என விஜய் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களிடம் பெரியார் பேசட்டும்!
திமுக எம்.பி கனிமொழி தனது பதிவில் ”அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், விசாரணை மற்றும் சீர்திருத்த உணர்வு ஆகியவற்றை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்” என இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும். வகுப்பறைகளில் சமத்துவம் ஓங்கட்டும். பாடங்களில் பிற்போக்கு ஒழியட்டும். மாணவர்களிடம் பெரியார் பேசட்டும்” என புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
பெரியார் என்றைக்கும் தமிழ்நாட்டின் அடையாளம்!
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில், “ஈராயிரம் ஆண்டு மடமைக்கு எதிரான ஈரோட்டுப் பூகம்பம் – பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியார் பிறந்த நாள் இன்று.
பழமை சிந்தனைகளால் பாதுகாக்கப்பட்ட அநீதிகளையும், மூட நம்பிக்கைகளையும் பகுத்தறிவு கொண்டு சுட்டெரித்த சுயமரியாதை சூரியன் தந்தை பெரியார் இன்றைக்கும், என்றைக்கும் நம் தமிழ்நாட்டின் அடையாளம்.
உடலால் மறைந்தாலும்; என்றும் மறையாத – எக்காலமும் பொருந்துகிற திராவிடத் தத்துவமாய் நம்மோடு வாழ்கின்ற பெரியாரின் கருத்துக்களை அடுத்தடுத்த தலைமுறைக்கு இன்னும் வேகத்தோடும் – ஆழத்தோடும் கொண்டு சேர்க்க உறுதியேற்போம். சமூகநீதி நாள் போற்றுவோம்! தந்தை பெரியார் வாழ்க!” என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கெளதம் மேனன் டைரக்சனில் மேடையில் ரொமன்ஸ் செய்த விஜய் ஆண்டனி
சிறப்பு பூஜை நடத்தியும் பயனில்லை… 6 சார் பதிவாளர் அலுவலகங்களில் ரூ.11.93 லட்சம் சிக்கியது!