வைஃபை ஆன் செய்ததும் பெரியார் திடலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விசிட் அடித்த காட்சிகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“செப்டம்பர் 17 ஆம் தேதி பெரியார் பிறந்தநாளை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது செய்திகளை வெளியிட்டனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும் பெரியார் பிறந்தநாள் குறித்த தனது கருத்தை வெளியிட்டு பெரியாருக்கு புகழாரம் சூட்டினார்.
இத்தோடு நின்றுவிடாமல் செப்டம்பர் 17 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு மேல் திடீரென விஜய் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்குச் சென்றார். பெரியார் திடலின் நுழைவாயிலுக்குள் காரில் சென்ற விஜய், ஒரு கையில் மலர் மாலை, இன்னொரு கையில் மலர்தட்டோடு இறங்கி பெரியார் திடலில் இருக்கும் பெரியார் திருவுருவச் சிலையை நெருங்கினார்.
அப்போது பெரியார் திடலின் ஆடிட்டோரியத்தில் பெரியார் பிறந்த தின நிகழ்ச்சிகள் காலைமுதலே நடந்துகொண்டிருந்தன. லஞ்ச் பிரேக்கில்தான் திடீரென விஜய் வந்திருக்கிறார் என்ற தகவல் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த சில ஊடகத்தினருக்கு தெரியவந்திருக்கிறது. அவர்கள் அங்கே ஓடி வந்தபோது விஜய் வேகவேகமாக பெரியார் சிலைக்கு மாலை வைத்து மரியாதை செலுத்திக் கொண்டிருந்தார். எல்லாமே சிற்சில நிமிடங்கள்தான். அதிகபட்சம் 3 முதல் 4 நிமிடங்களில் விஜய் மீண்டும் காரில் ஏறிப் புறப்பட்டுவிட்டார்.
பொதுவாக பெரியார் திடலுக்கு வரும் விஐபிகள் திடல் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டுதான் அங்கே செல்வார்கள். ஆனால் அப்படி எந்த ஒரு தகவலும் கொடுக்காமல் விஜய் அங்கே வந்து சென்றிருக்கிறார். பகல் 12 மணி வாக்கில் விஜய் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் பெரியார் திடலுக்குள் சென்று நோட்டம் பார்த்துவிட்டு அவர் சொன்னபடிதான் லஞ்ச பிரேக்கில் பெரியார் திடலுக்கு சென்றிருக்கிறார் விஜய். அவரது கட்சிக்குள்ளேயே பலருக்கும் தெரியாத ரகசிய பாம் போலத்தான் இந்த விசிட் அமைந்திருக்கிறது.
இதுகுறித்து விஜய் கட்சி வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘பெரியார் பிறந்தநாளுக்கு அவரை மதிக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும், பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு மாலை இட்டு, வணங்குவது வழக்கம்.
ஆனால், தமிழக வெற்றிக் கழகம், பெரியாரின் சம உரிமை, சமத்துவம், சமூக நீதிக் கொள்கைகளைப் பெயரளவில் மட்டும் இல்லாமல் மனதளவில், சமரசமின்றிப் பெரிதும் மதித்துப் போற்றும் ஓர் அரசியல் இயக்கம். அதேபோல அவரது பெண் உரிமை, பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், பெண்கள் பாதுகாப்பு போன்ற பெண்கள் சார்ந்த முன்னெடுப்பைக் கொள்கையாகவேப் பின்பற்றுவதில் மற்றும் அதன் செயலாக்கத்தில் மிக உறுதியாக நிற்கும் இயக்கம்.
இப்படியெல்லாம் பெரியாரை மனதில் தாங்கி மதித்துப் போற்றுகிற விஜய், அவரது பிறந்தநாளுக்கு வணக்கம் செலுத்த அர்த்தம் மிகுந்த ஓர் இடத்தைத் தேடினார். பிற இடங்களில் பெரியார் சிலைகள் இருந்தாலும், பெரியார் உலவிய, பெரியாரின் காலடித் தடங்கள் பதிந்த இடத்தில் அவருக்குப் பிறந்தநாள் வணக்கம் செலுத்துவதுதான் ஓர் கொள்கைவழி வணக்கமாகவும் இருக்கும் என்று செப்டம்பர் 16 ஆம் தேதியே தனக்கு நெருக்கமானவர்களிடம் விவாதித்திருக்கிறார் விஜய்.
அதுமட்டுமல்ல, கட்சி அறிவிப்பு, கொடி அறிவிப்பு என இதுவரை கட்சித் தலைமையகத்தில் நடந்த நிகழ்வில் மட்டுமே பங்கேற்ற விஜய்… தனது முதல் பொது நிகழ்ச்சியாக பெரியார் திடல் நிகழ்வையே தேர்வு செய்திருக்கிறார். சமூக நீதி அரசியலையே முன்னெடுக்கப் போகிறேன் என்று அழுத்தம் திருத்தமாக சொல்வதற்கும்… பாஜகவின் பி டீம் என்பதை உடைக்கும் வண்ணமும் இதைச் செய்திருக்கிறார் விஜய்’ என்கிறார்கள்.
அதேநேரம் திமுகவுக்குள் விஜய்யின் பெரியார் திடல் விசிட் சற்று அதிர்வுகளை ஏற்படுத்தியது. இன்று பகலில் இருந்தே திமுகவின் முப்பெரும் விழாதான் ஊடகச் செய்திகளை ஆக்கிரமித்திருந்தது. ஆனால் பிற்பகலில் இருந்து விஜய் பெரியார் திடலுக்கு சென்றதை அடிப்படையாக வைத்து ஊடக விவாதங்கள் களைகட்டத் தொடங்கின.
தவெக வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘ஆகஸ்டு 22 ஆம் தேதி விஜய் கொடி அறிமுக விழா என ஏற்கனவே அறிவித்தார். அதன்படி அன்று காலை தவெக தலைமையகத்தில் விழா தொடங்கிய நிலையில் தொலைக்காட்சிகள் அதை ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. அப்போது திமுகவின் அதிகாரபூர்வ டிவியான கலைஞர் டிவியில் அமைச்சரவை மாற்றம் பற்றிய ஃப்ளாஷ் செய்தி வெளியானது. கலைஞர் டிவியிலேயே வந்துவிட்டது என்றால் உண்மைதான் என்று எல்லா சேனல்களும் அதை ரிப்பீட் செய்தன. அதனால், விஜய்யின் கொடி அறிமுக விழா பற்றிய செய்தியின் முக்கியத்துவம் சற்று நேரம் குறைக்கப்பட்டது. அதேபோல் செப்டம்பர் 17 ஆம் தேதி பெரியார் பிறந்தநாளன்று திமுகவின் முப்பெரும் விழாவுக்காக திட்டமிட்டு விஜய் ஏதும் செய்யவில்லை’ என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
ப்ரோ என் வழி… தனி வழி… – அப்டேட் குமாரு
மகாவிஷ்ணுவுக்காக வாட்ஸ் அப் க்ரூப்: சென்னை முதன்மை கல்வி அலுவலர் மாற்றம்!