வைக்கம் பெரியார் நினைவகம் மற்றும் நூலக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக இன்று (டிசம்பர் 11) கேரளா சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் கோயில் நுழைவு போராட்டத்தில் பங்கேற்று வழிநடத்தி, அதில் வெற்றியும் கண்ட தந்தை பெரியாருக்கு வைக்கத்தில் சிலை அமைக்கப்பட்டு 1994ஆம் ஆண்டு நினைவகம் திறக்கப்பட்டது.
அந்த நினைவகம் பழமையாக மாறியதால், வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அதனை ரூ.8.14 கோடியில் புனரமைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்று வந்த சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.
பெரியாரின் சிலையுடன் கூடிய நினைவகத்தில், நூலகம், பார்வையாளர்கள் மாடம், சிறுவர் பூங்கா உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவகம் மற்றும் நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (டிசம்பர் 12) திறந்து வைக்கிறார். இவ்விழாவுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையேற்கிறார்.
இவ்விழாவில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள நெடும்பாசேரி விமான நிலையம் சென்றடைந்தார்.
சென்னையில் இருந்து புறப்படுவதற்கு முன்பாக நூறாண்டுகளுக்கு முன்பு பெரியார் தலைமையில் நடந்த வைக்கம் போராட்டம் குறித்த சிறப்பு வீடியோவை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்தார்.
கேரளா சென்றடைந்த ஸ்டாலினுக்கு அம்மாநில அரசு சார்பில் பாரம்பரிய முறைப்படி செண்டை மேளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அவருக்கு கேரள அமைச்சர்களும், காவல்துறை உயரதிகாரிகளும் புத்தகங்களை பரிசாக வழங்கி வரவேற்றனர்.
தொடந்து திமுக அமைப்பாளர் கே.ஆர். முருகேசன் தலைமையில் நூற்றுக்கணக்கான திமுகவினர் ஸ்டாலினை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்றனர்.
இதுதொடர்பாக தனது எக்ஸ்தள பக்கத்தில் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ”துடிப்பான கலாச்சாரம், அமைதியான அழகு மற்றும் முற்போக்கான நிலம் கொண்ட கேரளாவுக்கு வந்தடைந்தேன். ஒவ்வொரு முறை நான் இங்கு வரும்போதும், எங்கள் திராவிட உடன்பிறப்புகளின் அன்பான வரவேற்பு மற்றும் உண்மையான விருந்தோம்பல் என்னைத் தொடுகிறது. உண்மையிலேயே வீடு போல் உணர்கிறேன்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கோட்டயம் சென்ற முதல்வருக்கு கேரளா மாநில காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.
வைக்கத்தில் பெரியார் நினைவக புனரமைப்பு பணிகள் ஆய்வு செய்வதற்காகவும், விழா முன்னேற்பாட்டிற்காகவும் அமைச்சர் எ.வ.வேலு ஏற்கெனவே கேரளா சென்றிருந்த நிலையில் அவரும் இன்று கோட்டயம் வந்த முதல்வர் ஸ்டாலினை வரவேற்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…