|

பொலிவு பெறும் வைக்கம் பெரியார் நினைவகம்!

பழ.அதியமான்

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டை (1924- 2024) ஒட்டி வைக்கத்தில் பெரியார் நினைவகம் நவீனமாக்கப்பட்டு புதுப்பொலிவுடன் இன்று (12.12.2024) திறக்கப்படுகிறது.

முன்பு தரைத்தளத்தில் கண்காட்சி அறையுடன் மட்டும் விளங்கிய அந்த நினைவகம் நூலகத்துடன் இப்பொழுது மாடிக் கட்டிடமாக விரிவாகியுள்ளது.

1985-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கேரள அமைச்சர் பி.என்.ஜோசப் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு 1994 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் நாள் நினைவகம் திறக்கப்பட்டது.

30 ஆண்டுகளுக்குப் பின் இப்பொழுது மறுசீரமைப்பு நிகழ்ந்துள்ளது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும், தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஆசிரியர் கி.வீரமணியும் விழாவில் கலந்து கொள்கின்றனர்.

கேரள அரசின் தலைமைச் செயலாளர் உள்பட பலரும் பங்கேற்கும் இந்த அரசு விழாவைப் பெரியாரின் வைக்கம் பங்களிப்பைக் கேரளம் மீண்டும் அறிந்தேற்பு செய்யும் நிகழ்வாகப் பார்க்கலாம்.

எர்ணாகுளத்திலிருந்து சாலை வழியாக வைக்கம் வரும் எவரும் பெரியார் நினைவகத்தைக் கடந்து தான் நகருக்குள் நுழைய இயலும். நகரின் தொடக்கத்தில் நினைவகம் அமைந்துள்ளது.

வைக்கம் போராட்டத்தின் மூலவரான டி.கே.மாதவன், போராட்டத்திற்கு உயர்சாதியினரின் ஆதரவைத் திரட்டிய மன்னத்து பத்மநாபன் ஆகியோரது சிலைகளின் அருகில் இந்த நினைவகம் பெரியாரின் சிலையுடன் அமைந்துள்ளது.

மொழி கடந்து, எல்லையும் கடந்து தாழ்த்தப்பட்டவரின், பிற்படுத்தப்பட்டவரின் சஞ்சார உரிமைக்காகப் போராடிய பெரியாருக்கு அமைந்துள்ள இந்த நினைவகம் கடந்த காலத்தைத் திறந்து காட்டும் பௌதீகமான வரலாற்றுப் புத்தகம்.

கண்ணில் பட்டதும், இது என்ன கட்டடம்? இது என்ன சிலை? என்று கேட்கத் தொடங்குவதிலிருந்து இந்த வரலாற்றுப் பாடம் ஆரம்பிக்கிறது. சம்பவத்தை அறிந்தவரோ இந்த நினைவகத்தைப் பார்க்குந்தொறும் அது சொல்லாமல் சொல்லும் வரலாற்றை அசைபோடுவர்.

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டைத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 30.3.2023 அன்று முதலமைச்சர் தொடங்கி வைத்தார். நூற்றாண்டையொட்டி நிகழ்த்தவிருப்பதாக 11 பணிகளை அவர் பட்டியலிட்டார்.

அவற்றுள் இதுவரை ஏழு பணிகள் நிறைவேறிவிட்டன. பழ.அதியமான் எழுதிய வைக்கம் போராட்டம் தமிழ் நூலின் மொழிபெயர்ப்பு, வைக்கம் போராட்டம் பற்றி புதிய சிறு நூல், நூற்றாண்டு மலர் போன்ற பணிகள் நடந்தேறிவிட்டன. எட்டாவதாக வைக்கம் பெரியார் நினைவிடத்தை நவீன முறையில் மறுசீரமைக்கும் இப்பெரும்பணியும் இன்று நிறைவேறிவிட்டது.

ஏன் வைக்கத்தில் நினைவகம்?

போராட்டம் நிகழ்ந்த 1924- 25 காலகட்டத்தில் பெரியார் வைக்கத்தில் பல மாதங்கள் முகாமிட்டிருந்தார். ஏழு முறை வைக்கம் வந்திருந்தார். காந்தி வந்த போது உடனிருந்தார். அனைத்திற்கும் உச்சமாக வைக்கம் போராட்டத்தின் வெற்றி விழாவிற்குத் தலைமை ஏற்றார்.

வைக்கத்தில் நாராயண குருவுக்குச் சொந்தமான ஆசிரமத்தில் போராட்ட காலத்தில் பெரியார் “தாமசித்தார் ” தடையை மீறியதற்காக இருமுறை கைதானார். அருவிக் குத்து, திருவனந்தபுரம் சிறைகளில் அடைக்கப்பட்டு முன்பு வைக்கம் காவல் நிலையத்தில் பல நாள்கள் சிறையிருந்தார்.

பெரியார் சிறையிருந்த காவல் நிலையக் கட்டடம் இன்னும் சரித்திர சாட்சியாய்ப் பேணப்பட்டு வருகிறது. பெரியார் கொச்சியிலிருந்து நீர் வழியாக வைக்கம் வந்திறங்கினார். அந்தப் படகுத்துறையின் பெயர்ப் பலகைகூட பழமை மாறாமல் இன்னமும் காட்சி தருகிறது.

வைக்கம் மகாதேவர் கோயிலின் கோபுர வாயிலில் தினமும் போராடிய இடம் கல்வெட்டுடன் காட்சி தருகிறது. போராட்ட காலத்தில் தினமும் ஆற்றங்கரையில் சத்தியாகிரக ஆதரவுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பல நாள்கள் பெரியார் பேசினார்.

ஆக அவர் வந்திறங்கிய படகுத்துறை, போராடிய கோபுர வாயில்கள், தங்கியிருந்த ஆசிரமம், அடைபட்டிருந்த காவல் நிலைய சிறை, சொற்பொழிவாற்றிய ஆற்றங்கரை அனைத்தும் உள்ள வைக்கத்தில் அமையாமல் பெரியாரின் நினைவகம் வேறு எங்கே அமைவது? சமூக நீதிப் பயணத்தில் கடந்து வந்த காலத்தை நினைவூட்டுவதல்லவா அக்கட்டடம் !

ஏன் பெரியாருக்கு நினைவகம் ?

கேரளத்தவர் பலரும் வைக்கத்திற்குப் பங்களித்திருக்க பெரியாருக்கு மட்டும் ஏன் நினைவகம் என்ற கேள்வி வெறுப்பு அடிப்படையில் பிறப்பது. ஆயினும் தர்க்கபூர்வமானது. பொதுவாக சத்தியாகிரகிகளை நினைவு கூரும் வண்ணம் கேரள அரசு தனியே வைக்கத்தில் ஒரு நினைவகம் அமைத்துப் பேணி வருகிறது என்பது ஒரு பதில். அது அடிக்கடி நவீனமாக்கப்பட்டும் வருகிறது என்பது கூடுதல் தகவல். நமது நினைவகம் குறிப்பாகப் பெரியாரின் பணியை நினைவூட்டும் நினைவகம் ஆகும்.

கேரளப் பிரதேச காங்கிரஸ்காரரைத் தவிர நாராயண குருவின் யோகத்தைச் சேர்ந்த பலரும் போராட்டத்தில் கலந்திருந்தனர். தமிழ்நாட்டிலிருந்து பெரியார், கோவை அய்யாமுத்து, ராஜாஜி, வரதராஜுலு நாயுடு, எஸ். சீனிவாசய்யங்கார், எஸ். ராமநாதன், சி.வி.வெங்கட்ரமண ஐயங்கார், எம்பெருமாள் நாயுடு போன்ற தலைவர்களும், பெரியாரின் அழைப்புக்கிணங்கி பெயர் குறிப்பிட இயலாத அளவில் எண்ணிக்கையில் அடங்காத ஏராளமான தொண்டர்களும் வைக்கம் வந்துற்றனர்.

இவர்களுள் சிறை சென்றோர் பெரியார், அய்யாமுத்து , சக்கரவர்த்தி ஐயங்கார் உள்ளிட்ட வெகு சிலரே. ராஜாஜி, எஸ். சீனிவாச ஐயங்கார் போன்றோர் வைதிகர்களுடனும் அரசுடனும் சமாதானம் பேசுவதற்காக வைக்கம் வந்தனர்.

பெரியார் தான் போராட்டத்திற்குத் தலைமை ஏற்றார். இருமுறை சிறைப்பட்டார். விடுதலையான இருமுறையும் வீடு செல்லாமல் மீண்டும் மீண்டும் போராட்டக் களத்திற்குத் திரும்பினார்.

வைக்கத்திலேயே சுற்றுச் சுழன்று பேசிப் பேசிப் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவைத் திரட்டினார். அதில் வெற்றியும் பெற்றார். சிறையில் 67 நாள்களும் போராட்டக் களத்தில் 74 நாள்களுமாக வைக்கம் போராட்டத்திற்குப் பங்களித்தார்.

அதனால் தான் வைக்கம் வரலாற்றை எழுதிய டி.கே.ரவீந்திரன் என்ற கேரள வரலாற்றுப் பேராசிரியர் பெரியாரின் வைக்கம் வருகை இயக்கத்துக்குப் புதிய உயிரைத் தந்தது என்று அவதானித்தார். நமது திரு.வி.க வைக்கம் வீரர் என்றழைத்தார்.

ஒரு முறை வைக்கம் வந்த காந்தி சத்தியாகிரகிகள், வைதிகர்கள், ராணியார், நாராயண குரு , அரசுத்துறையினர் என அனைத்து தரப்பினரையும் சந்தித்து சமாதானம் பேசினார். இப்படி காந்தி சத்தியாகிரக கட்சியின் வக்கீலாகச் செயல்பட்டார் என்றால் பெரியாரோ கட்சிக்காரராகக் களத்தில் நின்றார்.

போராட்டம் தொய்வுற்ற காலத்தில், தக்க தருணத்தில் சென்று பல எதிர்ப்புகளையும் மீறிப் போராட்டத்தை நிமிர்த்தியவர் பெரியார். அங்கேயே பலகாலம் குடும்பத்துடன் தங்கியிருந்து, அதே வேலையாகப் போராடிக் கொண்டிருந்தார். எவருக்கும் நேராத இருமுறை சிறைவாசம் அவருக்கு நேர்ந்தது.

வைக்கம் தொடர்பில் சிறை சென்ற அனைவரும் அரசியல் கைதிகளாக நடத்தப்பட்டனர். ஆனால், பெரியாரோ சாதாரண தண்டனைக் கைதியாக நடத்தப்பட்டார்.

மூட்டு வரை வேட்டியும் சிறை உடையும் கழுத்தில் மரத்தாலியும் கைகளில் விலங்கும் அணிவிக்கப்பட்டிருந்தார். சிறைப்பட்ட எவருக்கும் அளிக்கப்படாத கடுங் காவல் தண்டனை அவருக்கு வழங்கப்பட்டது.

தனிமைச் சிறையில் வாடினார். பெரியாரை அரசியல் கைதியாக நடத்தும்படி உடன் சிறையிருந்த, கேரளத் தலைவர் கே.பி. கேசவ மேனன் அரசைக் கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டுத் தலைவர் ராஜாஜி திறந்த கடிதம் எழுதி வேண்டிக்கொண்டார். எதற்கும் சமஸ்தான அரசு செவி சாய்க்கவில்லை.

இத்தகைய சூழலில் பொதுக் காரியத்திற்காக மக்கள் சார்பில் துன்பப்பட்டவரின் பெரு முயற்சியை அடுத்த தலைமுறை அறிந்து உத்வேகம் பெறுவது வரலாற்றுக்கு முக்கியமில்லையா?

அதற்காகச் சம்பவ இடத்தில் நினைவகம் எழுப்புவதும், அதை காலந்தோறும் புதுப்பித்துக் கொண்டிருப்பதும் வரலாற்றைப் பாதுகாக்கும் முக்கியமான செயல்பாடுகள் . அதைச் செய்த தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டுக்கள். அது பெரியாரின் அடையாளம் மட்டுமல்ல தமிழர்களின் அடையாளம்.

தமிழக முதல்வரின் வைக்கம் நூற்றாண்டு விழா அறிவிப்புகளில், பெரியாரைப் போல எல்லை கடந்து சென்று சமுதாயத்திற்காகப் போராடுபவருக்கான வைக்கம் விருது அறிவிப்பு, அஞ்சல் தலை வெளியீடு, அதைவிடவும் முக்கியமாகப் பெரியார் முதன்முதலாகச் சிறை வைக்கப்பட்டிருந்த அருவிக் குத்து என்ற கேரளக் கிராமத்தில் பெரியார் நினைவிடம் என்ற மூன்றும் செயல் வடிவம் பெறக் காத்துக் கொண்டுள்ளது.

வைக்கம் நூற்றாண்டையொட்டி உருவாக்கப்படவுள்ள அருவிக் குத்து நினைவுச்சின்னம், பெரியாரின் தியாக உழைப்பை என்றென்றும் நினைவூட்டுவதாக விளங்கும். இரு மாநில ஒற்றுமைக்கு நிரந்தர நினைவுச்சின்னமாகவும் மாறிவிடும். அதற்காகக் காத்திருப்போம்.

செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் 

கனமழை… எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?

ஒரு நல்ல ஆசிரியரின் பண்புகள்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts