தந்தை பெரியாரின் 51-ஆவது நினைவு தினம் இன்று (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர்பாபு, சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, கனிமொழி, மேயர் பிரியா, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் பெரியார் பகுத்தறிவு எணினி (டிஜிட்டல்) நூலகம் மற்றும் ஆய்வு மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பெரியார் பயணத்தில்…
மேலும் அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “தந்தை பெரியார் தனது பயணத்தை நிறுத்திக் கொண்டு 51 ஆண்டுகளாகின்றன; நாம் அவரது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்!” என தெரிவித்துள்ளார்.
பகுத்தறியும் பண்பை ஊட்டிய பெரியார்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில், “எதையும் அப்படியே நம்பாதே, ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேள்’ என்னும் பகுத்தறியும் பண்பை ஊட்டிய தந்தை பெரியாரின் நினைவு நாள் இன்று!
‘மானமும் அறிவும் தான் மனிதருக்கு அழகு’ என்பதை மானுடத்துக்கு உணர்த்த தனது இறுதி மூச்சு வரை தளராமல் உழைத்த தந்தை பெரியார் தனது சுற்றுப்பயணத்தை நிறுத்திக் கொண்ட நாள்!
சமூகநீதி, மதசார்பின்மை காக்க – மூடநம்பிக்கை ஒழிய அய்யா காட்டிய வழியில் அயராது உழைக்க இந்நாளில் உறுதி ஏற்போம். பெரியாரின் நினைவைப் போற்றுவோம்” என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் அரணாய் காத்து நிற்கும் தலைவர்!
”திராவிட இனத்தின் எரிதழலாய் – கொள்கைப் பேரொளியாய் – பகுத்தறிவுச் சுடராய் – ஆதிக்க சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாய் – சமரசமற்ற போர்க்குரலாய், என்றென்றும் தமிழ்நாட்டின் அரணாய் காத்து நிற்கும் தன்னிகரற்ற தலைவர் தந்தை பெரியாரின் நினைவு தினம் இன்று. அவரது கொள்கைத் தடியை கையிலேந்தி சாதி – மத – ஆதிக்க பிரிவினை சக்திகளை வேரறுப்போம், சமத்துவ சமூகம் படைப்போம்” என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
எங்களது எதிரிகள் யார் தெரியுமா? – கிறிஸ்துமஸ் விழாவில் ஸ்டாலின் பேச்சு!