பெரியாரின் நினைவுதினம்: பகுத்தறிவு பகலவனுக்கு மரியாதை!
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் வெங்கடநாயக்கர் – சின்னத்தாயம்மாள் தம்பதிக்கு 1879 ஆம் ஆண்டு பிறந்த ஈ.வெ.ராமசாமி, சாதிக்கொடுமை, பெண்ணடிமைக்கு எதிராக போராடியவர். 90 வயது வரை சமூக நீதிக் கொள்கைக்காக குரல் கொடுத்த தந்தை பெரியாரின் 49 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
இதேபோன்று சென்னை பெரியார் திடலுக்குச் சென்ற மதிமுக தலைவர் வைகோ மரியாதை, மலரஞ்சலி செலுத்தினார்.
பெரியாரின் சொந்த ஊரான ஈரோட்டில், பல்வேறு தரப்பினரும் அவரது உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைச்சர் சு.முத்துசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், மேயர் நாகரத்தினம் ஆகியோர், பெரியாரின் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
இதே போல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
பெரியார் 49-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலையிலிருந்து பெரியார் திடல் வரை திராவிடர் கழகத்தினர் அமைதி பேரணி நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழக துணைத் தலைவர் கலி பூங்குன்றன், சனாதன சக்திகள் அச்சுறுத்தி வரும் வேளையில் பெரியார் இந்தியா முழுவதும் தேவைப்படுகிறார் என்றார்.
சனாதன சக்திகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்வோம் எனவும் கலி பூங்குன்றன் தெரிவித்தார். திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற இந்தப் பேரணியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கலை.ரா
எம்ஜிஆர் நினைவு தினம்: எடப்பாடி பழனிசாமி மரியாதை!
உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம்: சினிமா துறைக்கு நல்லதா கெட்டதா?