சிங்கப்பூரிலும் பெரியார்! ஸ்ரீரங்கத்திலும் பெரியார்! அரை நூற்றாண்டு கடந்தும் முளைக்கும் விதைகள்!

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை Periyar in Singapore and Srirangam

புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள் என்பது சொல்வழக்கு!

பெரியார் மறைந்து ஐம்பதாண்டுகள், அரை நூற்றாண்டுக்காலம் நிறைவடையப் போகிறது! சென்ற வாரம் செய்திகளில் இரண்டு காரணங்களுக்காக இடம் பெற்றார் பெரியார்.

அது இரண்டுமே அவரது சிந்தனைகள் பலவடிவங்களில் தொடர்ந்து இயக்கம் பெறுவதையே சுட்டிக் காட்டுகின்றன. ஒன்று, அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் சிங்கப்பூரில் “பெரியாரும் அறிவியலும்” என்று நிகழ்த்திய உரை. மற்றொன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜக ஆட்சிக்கு வந்தால் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பெரியார் சிலையை அகற்றுவோம் என்று கூறியது.

ஒன்று பெரியார் நினைவை போற்றும் அண்ணாதுரை கூற்று. இன்னொன்று பெரியார் நினைவை அகற்றத் துடிக்கும் அண்ணாமலை கூற்று. இரண்டையும் இணைத்துப் பார்க்கும்போது பெரியாரின் சிந்தனைகள் இருபத்தோராம் நூற்றாண்டு தமிழ் சமூகத்தில் தொடர்ந்து இயக்கம் பெறப்போவது உறுதியாகின்றது.

அவர் தூவிய விதைகளெல்லாம் தொடர்ந்து முளைக்கப் போகின்றன. தமிழ்நாடு பகுத்தறிவின்  நந்தவனமாகும் சாத்தியம் பிரகாசமாக உள்ளது. இந்த இரு நிகழ்வுகளையும் நாம் அலசிப் பார்த்து புரிந்துகொள்வது அவசியம். 

Periyar and science Mylswamy Annadurai speech in Singapore

சிங்கப்பூரில் பெரியார்

அறிவியலாளர் அண்ணாதுரையின் சிங்கப்பூர் உரை பெரியாரை முற்றிலும் புதிய பரிமாணத்தில் வெளிப்படுத்தியது. அவருடைய குடும்பம் திராவிட இயக்கப் பற்றுள்ளது. அவர் தந்தை மயில்சாமி அவருக்கு பெயர் வைத்ததே அறிஞர் அண்ணாவை மனதில் வைத்துதான். அவர் அதனால் பெரியாரை தன் கல்வித்துறை, அறிவியல் பயணத்திற்கு வழிகாட்டும் கருத்துக்களை வழங்கியவராக தன் உரையில் எடுத்துக்கூறியது சிறப்பாக இருந்தது. 

நவீன கால கல்வியின் நோக்கம் என்ன? கீழ்படிதலுக்கு ஏற்ற அறிவுரைகளை மாணவர்களின் மூளையில் ஏற்றுவது அல்ல. தகவல்களை திணித்து, செய்முறைகளை பயிற்றுவித்து அவற்றை பயன்படுத்தி பணி செய்யும் இயந்திரங்களாக உருவாக்குவது அல்ல. மாறாக தனக்கு கிடைக்கும் தரவுகளை வைத்து சிந்திக்கும் ஆற்றல் பெற்றவராக ஒருவரை உருவாக்க வேண்டும் என்பதுதான். 

இந்த நோக்கினைத்தான் ஐரோப்பாவில் ஒளியூட்டுக் காலம் (age of enlightenment) என அழைத்தார்கள். ஜெர்மானிய தத்துவ அறிஞர் இமானுவேல் காண்ட் 1784-ஆம் ஆண்டு “What is Enlighternment?” என்ற ஒரு கட்டுரையை எழுதினார். அதில் அவர் மானுடம் தானாக வலிந்து ஏற்படுத்திக்கொண்ட முதிர்ச்சியின்மையிலிருந்து விடுபடுவதே ஒளியூட்டுக் காலம் என்றார்.

பிறர் என்ன கூறுகிறார்கள் என்பதிலிருந்து தன் செயல்பாட்டை வடிவமைத்துக்கொள்ளாமல். தன் சிந்தனையை பயன்படுத்தி சரி, தவறு எது என்பதை பகுத்தாய்வதே முதிர்ச்சி என்றார். அதை அவர் “Aude Sapare!” “அறியத் துணிவாயாக!” என்ற முழக்கமாக முன்வைத்தார். 

கிட்ட த்தட்ட இந்த கருத்துக்களையே பெரியாரிடமிருந்து அண்ணாதுரை எடுத்துக் கொள்கிறார். “முன்னோர்களின் கூற்றையெல்லாம் விட, உன் அறிவு பெரிது; அதை சிந்தி!” என்கிறார் பெரியார். செக்கு மாடாக இருக்காமல், பந்தயக் குதிரையாக மாறுவதே கல்வி என்று பெரியார் கூறியதை மிக அழகாக பகுத்து, ஆராய்ந்து விளக்கினார் அண்ணாதுரை.

தனக்குள்ள முக்கிய தகுதி துணிவு என்று பெரியார் கூறியதை ஆராயும் அண்ணாதுரை, ஏற்கனவே பொதுக்கருத்தாக அறிவியலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றில் திருப்தியடையாமல், மேலும் அதனை ஆராய்ந்துபார்க்க முற்படுவதற்கு துணிவு வேண்டும் என்பதை விளக்குகிறார். அதனால்தான் நிலவினை பற்றிய கருத்துக்களை முடிந்த முடிவாக கருதாமல் அதில் நீர் இருக்கும் சாத்தியத்தை ஆராயத் துணிந்ததாகக் கூறினார் அண்ணாதுரை.

இது போன்ற சுய அறிதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் கருத்துக்களை எவ்வளவோ தத்துவவாதிகள் சொல்லியிருக்கலாம். சாக்ரடீஸ் சொல்லியிருக்கலாம்; புத்தர் சொல்லியிருக்கலாம்; காண்ட் சொல்லியிருக்கலாம்; நீட்சே சொல்லியிருக்கலாம். ஆனால் தமிழகத்தில் ஒரு கிராமத்தில் பிறந்த பிள்ளைக்கு இந்த கருத்துக்கள் சென்று சேரும் விதத்தில் கூறியவர் பெரியார்.

பெரியார் உலகில் தோன்றிய எந்த ஒரு தத்துவவாதிக்கும் இணையான சிந்தனை ஆழமும், வாழ்வின், இயற்கையின் நுட்பங்களை மின்னலென வெளிப்படுத்தும் கூர்நோக்கும் கொண்டவர். அண்ணாதுரையின் சிங்கப்பூர் உரையின் சிறப்பு என்னவென்றால் அவர் பெரியாரின் கூற்றுக்களை வெறும் மேற்கோளாக க் கூறாமல், அவற்றின் பொருளை விரிவாக விளக்கி உள்வாங்கும் முறையினை கைக்கொண்டதுதான். 

தமிழ்நாட்டின் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் பலரும் பெரியாரின் சொற்களை கவனமின்றியே வாசித்து வந்துள்ளார்கள் அல்லது முழுவதும் புறக்கணித்து வந்துள்ளார்கள் என்ற எண்ணம் எனக்கு உண்டு.

ஏனெனில் அவர் சமூகப் போராளியாக எளிய மக்களிடத்தில் பேசியதும், அவர்கள் சுயமரியாதைக்கு அச்சாரமாக பார்ப்பனர்கள் தங்களுக்கு கற்பித்துக்கொண்ட உயர்வுகளை எள்ளி நகையாடி தகர்க்கும் விதத்தில் பேசியதும் காரணமாக இருக்கலாம். அல்லது தேசியம், பார்ப்பனீயம், இறைமுதல்வாதம் ஆகிய புனித மையங்களுக்கு எதிராக தீவிரமாகப் பேசியதாலும் இருக்கலாம்.

மயில்சாமி அண்ணாதுரை போல அவர் வார்த்தைகளை அலசி, ஆராய்ந்து விரிவாகப் பொருள்கொள்ளும் போக்கு வளர்ச்சியடையும் போதுதான் பெரியார் சிந்தனையின் ஆகிருதி மேலும், மேலும் வெளிப்படும். 

பெரியாரின் தத்துவப் பார்வை தனித்துவமிக்கது என்று நான் நம்புகிறேன். அதனை உறுதி செய்துகொள்ளும்பொருட்டு உலகின் பல்வேறு தத்துவ சிந்தனை மரபுகளை பரிசீலித்து வருகிறேன். பெரியாரின் கூற்றுக்களும், செயல்முறையும் அபூர்வமானவை. அவருடையது ஒருவிதமான தத்துவார்த்த செயல்முறையாகும் (philosophical praxis). பொதுப்புத்தியினை வடிவமைக்கும் சொல்லாடல்களை கலைத்துப் போட்டு, முரண்வெளிகளை உருவாக்கி, சிந்தனையை விளவிக்கும் செயல்முறை அது.   

ஸ்ரீரங்கத்தில் பெரியார்! 

திருவரங்கம் என்று தமிழில் அழைக்கப்படும் தலத்திலுள்ள கோயில் மிகவும் தொன்மையானது. நிச்சயம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அதன் மையக் கட்டுமானம் இருந்து வந்துள்ளது.

சோழர் காலத்தில் அது மேலும் சிறப்புப் பெற்றது. கம்பர் அவருடைய ராமாவதாரம் நூலை அங்கேதான் அரங்கேற்றினார் என்று கூறப்படுகிறது. ராமானுஜர் அந்த கோயிலின் நடைமுறைகளை சீர்செய்து வடிவமைத்தார். பின்னர் நாயக்கர் காலத்தில் அந்த கோயில் மேலும் விரிவடைந்துள்ளது. பல்வேறு சுற்று மண்டபங்களும், கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன. 

தெற்கிலிருந்து அந்த கோயிலில் நுழையும்போது இருக்கும் மையமான நுழைவாயிலில் ஒரு பிரம்மாண்டமான கோபுரம் கட்ட விஜயநகர ஆட்சியில் பதினாறாம் நூற்றாண்டில் துவங்கினார்கள். பல்வேறு காரணங்களால் அடித்தளமிட்டு வாயில் கட்டப்பட்டவுடன் பணி நின்றுபோய்விட்டது. கோபுரம் இல்லாத அந்த பிரம்மாண்ட வாயில் ஒரு அழகான கற்பனையை தூண்டுவதாக விளங்கியது. 

ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதுகளின் இறுதியில் அகோபில மட ஜீயர் தன் கனவில் அந்த கோபுரத்தை கட்டுமாறு அரங்கநாதன் பணித்ததாகக் கூறினார். அதற்கான பரவலான ஆதரவைத் திரட்டினார். இருபதாம் நூற்றாண்டில் பத்து மாடி, இருபது மாடி குடியிருப்புகள் பரவலான பிறகு, விமானப் பயணங்கள் இயல்பான பிறகு, கோபுரங்களுக்கு முன் காலத்தில் இருந்த முக்கியத்துவம் கிடையாது என்றாலும் வலிந்து இந்த பிரம்மாண்ட கோபுரத்தை கட்டவேண்டும் என்று முனைந்தார்.

நானூறு ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட அஸ்திவாரத்தின் மீது கட்டுவது எவ்வளவு பாதுகாப்பானது என்ற கேள்வி எழுந்தது. எல்லா கேள்விகளையும் மத நம்பிக்கை, புனிதவாதம் வென்றது. 

அந்த கோபுரம் கட்டும் எண்ணம் உருவாகி, முயற்சியாகி, அது கட்டப்பட்ட காலத்தில் நான் திருவரங்கத்தில்தான் இருந்தேன். எனக்கு அந்த முயற்சியில் சிறிதும் ஒப்புதல் இருக்கவில்லை. இன்றைய காலத்தில் அவ்வளவு பணத்தை கோபுரம் கட்டுவதில் செல்வழிக்க வேண்டுமா என்பது ஒரு கேள்வி.

இரண்டாயிரம் ஆண்டுகளாக இருக்கும் புகழ்மிக்க இந்த கோயிலுக்கு இந்த கோபுரத்தால் என்ன புதிய மகத்துவம் வரப்போகிறது என்ற கேள்வி. மூன்றாவது அழகியல் அடிப்படையில் அந்த கோபுரமற்ற வாயிலின் கம்பீரம் காணாமல் போய்விடுமே என்ற வருத்தம். 

திருவரங்கத்தில் பிறந்தவரான எழுத்தாளர் சுஜாதா மட்டும்தான் இது போன்ற பழமை வாய்ந்த வரலாற்று கட்டுமானங்களை வெளிநாடுகளில் மாற்ற மாட்டார்கள்; அது தேவையற்றது என்று எழுதினார். ஆனால் பெரும்பாலானவர்கள் கோபுரத்திற்கு ஆதரவாகவே இருந்தார்கள்.

தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை மட்டுமன்றி, கர்நாடக, ஆந்திர அரசுகளும் கோபுரம் கட்ட நிதியுதவி செய்தன. இசையமைப்பாளர் இளையராஜா உதவினார். மேலும் பொதுமக்களிடமிருந்து நன்கொடை கணிசமாகத் திரட்டப்பட்டது. கோபுரம் கட்டி முடிக்கப்பட்டு 1987-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.  உலகிலேயே உயரமான கோயில் கோபுரம் இதுதான் என்று கூறப்படுகிறது. 

எதற்காக இவ்வளவும் கூறுகிறேன் என்றால் கோபுரம் கட்ட எவ்வளவு ஆதரவு திரண்டது, எப்படி மூன்று மாநில அரசுகள் உதவின என்பதையெல்லாம் நினைவுபடுத்தத்தான். முக்கியமான சுற்றுலாத்தலம் திருவரங்கம். தினமும் நூற்றுக்கணக்கான இந்திய, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். திருவிழாக்காலங்களில் பல பத்தாயிரம் மக்கள் திரள்வார்கள். வருடம் முழுவதும் பக்தர்களால் நிறைந்திருக்கும் பண்டைய தலம். 

அங்கே அந்த பிரம்மாண்ட ராஜகோபுரத்திற்கு நூறு மீட்டர் தூரத்தில் ஒரு வெண்கலச் சிலையொன்று வீற்றுள்ளது. அதுதான் பெரியார் சிலை. அதில் கடவுள் கொள்கையை கேள்வி கேட்கும், மறுதலிக்கும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. அருகில் சென்று படிப்பவர்களுக்குத்தான் அவை தெரியும். அந்த சிலை இருப்பதால் கோயிலில் கூட்டம் குறைந்துவிடவில்லை. அது அந்த சிலையின் நோக்கமும் இல்லை.

மக்களாட்சியில் பொதுவெளி என்பது கருத்துக்கள் களமாட இடமளிக்கவேண்டும். கடவுளை நம்புவது, இறைமுதல்வாதம் ஒரு கருத்து நிலையென்றால், கடவுள் மறுப்பு, பிரகிருதிவாதம் மற்றொரு கருத்து நிலையாகும். கடவுளை நம்புபவர்கள் ஒரு பிரம்மாண்டமான ராஜகோபுரத்தைக் கட்டலாம் என்றால், கடவுள் மறுப்பாளார்கள் அதன் முன் ஒரு சிறிய சிலையைக் கூட வைக்கக் கூடாதா என்ன? அந்த சிலை அங்கேயிருப்பது கடவுள் நம்பிக்கையாளர்களை புண்படுத்தும் என்றால், அந்த கோயிலும், ராஜகோபுரமும் கடவுள் மறுப்பாளனான என்னை புண்படுத்தாதா?

கடவுள் கோட்பாடும், கடவுள் மறுப்புக் கோட்பாடும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. என்றைக்கு கடவுள் என்ற சொல், பிம்பம், கருத்தாக்கம் தோன்றியதோ, அன்றைக்கு அதற்கான மறுப்பும் உடன் தோன்றிவிட்டது.

முன்பு கடவுள் பற்றையே ஆதாரமாகக் கொண்டு ஆட்சி நடந்த காலத்தில் மாற்று மத நம்பிக்கையாளர்களைக் கூட அப்புறப்படுத்தும் கொடுங்கோன்மை நிலவியது. தில்லை கோவிந்தரை கடலில் வீசினான் சைவ மத வெறியனான ஒரு சோழ அரசன்.

மக்களாட்சியில் அப்படி ஒரு மதசார்பு அரசு சாத்தியமல்ல; பொருத்தமானதும் அல்ல. ஆத்திகர்களுக்கும், நாத்திகர்களுக்கும், நம்பிக்கையாளர்களுக்கும், நம்பிக்கை அற்றவர்களுக்கும் பொதுவான அரசுதான் மக்களாட்சி அரசாக இருக்க முடியும். 

பெரியாரின் கடவுள் மறுப்பு என்பது சுயமரியாதைக்கான கடவுள் மறுப்பு. பூசக வம்சத்தின் வார்த்தைகளுக்கு கீழ்படிந்து அடிமை வாழ்வு வாழ மறுப்பதற்கான கடவுள் மறுப்பு. “கடவுளை மற, மனிதனை நினை” என்ற மானுட முன்னுரிமை சார்ந்த கடவுள் மறுப்பு;

மயில்சாமி அண்ணாதுரை கூறிய சுயமாக சிந்திக்கும் ஆற்றலை வளர்ப்பதற்கான கடவுள் மறுப்பு. “நட்ட கல்லும் பேசுமோ?” என்று கேட்ட சித்தர் மரபின் ஒருவகையான தொடர்ச்சிதான் அந்த கடவுள் மறுப்பு. 

அதனால்தான் மக்கள் அந்த சிலையையும் மதிப்பார்கள்; கோயிலுக்கும் செல்வார்கள். சுயசிந்தனையின் ஆன்மீகம், பரவசத்தின் ஆன்மீகம் இரண்டையும் ஏற்பவர்களாகவே பண்பட்ட மக்களின் மனோநிலை அமைகிறது.

ஆனால் மூட நம்பிக்கையாளர்களும், மதவெறியர்களும், மத அடையாள அரசியல்வாதிகளும்தான் மாற்றுக் கருத்தை அப்புறப்படுத்த நினைப்பார்கள். காலம் அவர்களைத்தான் அப்புறப்படுத்தும். பெரியார் சிலை என்பது மானுட சிந்தனையின் பரு வடிவமே. அதன் ஆன்மீகம் மக்களாட்சியின் ஆன்மீகம். Periyar in Singapore and Srirangam

கட்டுரையாளர் குறிப்பு:

Periyar in Singapore and Srirangam by Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இஸ்ரேலுக்கு கண்டனம்: ஐ.நா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு!

கோவளத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா பயணம்!

+1
0
+1
0
+1
0
+1
7
+1
1
+1
0
+1
0

1 thought on “சிங்கப்பூரிலும் பெரியார்! ஸ்ரீரங்கத்திலும் பெரியார்! அரை நூற்றாண்டு கடந்தும் முளைக்கும் விதைகள்!

  1. சொறிந்து விடுவது சுகமாக இருந்தாலும்.. தனியறையில் வைத்து கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *