பெரியார் குறித்து சர்ச்சை… சீமான் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!

Published On:

| By Selvam

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விலகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி 8-ஆம் தேதி கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “உனக்கு உடல் இச்சை வந்தால், பெற்ற தாயோ, மகளோ, அக்காவோ, தங்கையோ, அவர்களுடன் உறவு வைத்துக்கொண்டு சந்தோஷமாக இரு என்று பெரியார் சொன்னது பெண்ணிய உரிமையா?” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

சீமானின் இந்தப் பேச்சுக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக, பாமக உள்ளிட்ட பல கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழகம் முழுவதும் சீமான் மீது 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளது.

நேற்று (ஜனவரி 11) சென்னை கொளத்தூரில் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட ஸ்டாலின், “யார் யாரோ இன்றைக்கு பெரியாரை பற்றி பேசிக்கிட்ருக்கானுங்க. பெரியாரை விமர்சனம் செய்பவர்களைப் பற்றி பேசி நான் அவர்களை அடையாளம் காட்ட விரும்பவில்லை” என்று சீமான் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்தார்.

இந்தநிலையில், பெரியார் குறித்த சீமான் பேச்சு மற்ற கட்சிகள் மட்டுமல்லாமல், நாம் தமிழர் கட்சிக்குள்ளும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

சீமானின் இந்த பேச்சைக் கண்டித்து கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் மகாதேவன், சேலம் மாநகர் மாவட்ட கொள்கைப் பரப்புச் செயலாளர் மா.பா.அழகரசன், சேலம் மாநகர் மாவட்ட வணிகர் பாசறை இணைச் செயலாளர் வசந்தகுமார், சேலம் மேற்கு தொகுதி பொறுப்பாளர் பாஸ்கரன், ஓமலூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஸ்டாலின் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

மேலும், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “திராவிடத்தையையும் பெரியாரையும் ஒழிப்பதுதான் எனது நோக்கம் என்று அண்ணன் சீமான் பேசியிருப்பது அவருடைய சொந்த கருத்தே ஒழிய, நாம் தமிழரின் ஒட்டு மொத்த கருத்தல்ல.

ஆரியம்தான் தமிழனின் முதல் பகை, சீமானின் கருத்து ஆர்எஸ்எஸ், பாஜக, சங்கபரிவார் அமைப்புகளுங்கு துணை போகுமே ஒழிய ஒருபோதும் தமிழ் தேசியம் வெல்ல உதவாது,

திராவிடத்தையும், பெரியாரையும் ஒழிக்கும் திட்டத்தை சீமான் கைவிட்டுவிட்டு பகைவர்களின் சூழ்ச்சிக்கு பலியாகமால் நட்பு முரணோடு கைகோர்த்து தமிழ் தேசியம் வெல்ல காலத்திற்கு ஏற்றார்போல் வேலைத்திட்டத்தை தயார் செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கட்சியில் இருந்து விலகிய கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் மகாதேவன் மின்னம்பலத்திடம் பேசியபோது, “சீமான் ஆரம்ப காலத்தில் தத்துவார்த்த அரசியலை முன்னெடுத்தார். காலப்போக்கில் பெரியார் எதிர்ப்பு குறித்து கட்சிக்குள் சிலர் பேசிக்கொண்டிருப்பார்கள். நான் அவர்களை எதிர்த்து என்னுடைய கருத்தை பதிவு செய்து வந்துகொண்டிருந்தேன்.

அம்பேத்கரை ஏற்றுக்கொள்ளும் சீமான், பெரியாரை ஏன் ஏற்க மறுக்கிறார். தமிழ் மக்களுக்காக போராடியவர் பெரியார். அவரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கொள்கை ரீதியாக எதிர்க்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் நாம் தமிழர் அமைப்புக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக ஒரு கூட்டத்தில் சீமான் பேசும்போது, ’பெரியாரை திட்டுவதற்கு தான் இந்த கட்சியை நான் ஆரம்பத்திருக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால் அது உங்களது தவறான புரிதல். அதற்கு நீங்கள் இருக்க வேண்டிய கட்சி இது அல்ல. வெளியேறிவிடுங்கள்’ என்று பேசினார். பெரியாரையும் ஒரு வழிகாட்டியாக நாம் ஏற்றுக்கொண்டு தான் பயணிக்கிறோம் என்று அழுத்தமாக பதிவு செய்தார்.

தொடர்ச்சியாக சீமானை சங்கி, சங்கி என்று பலரும் சொல்லி வரும் நிலையில், இதுபோன்ற அவரது பேச்சுக்களால் கட்சி சின்னாபின்னமாகி வருகிறது. கட்சியில் இருந்து நிறைய பேர் வெளிய வர தயாராக இருக்கின்றனர். நான் யாரையும் ஒருங்கிணைக்கப் போவதில்லை. அந்த துரோக செயலில் நான் ஈடுபடப்போவதில்லை.

எதிர்கால இளைஞர்கள் நாம் தமிழர் கட்சியை வழிநடத்தி செல்ல வேண்டும் என்று சி.பா. ஆதித்தனார் பதிவு செய்துவிட்டு சென்றார். அதேபோல, இந்த கட்சியின் தேவை தமிழ் மண்ணுக்கு கட்டாயமாக தேவை இருக்கிறது. ஆனால், சீமான் செல்லும் பாதையில் தடம் மாறுவதாக நான் நினைக்கிறேன்.

சீமான் தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து மாறி, பெரியார் மீது பரப்பப்பட்ட அவதூறுகளை திரும்ப பெற்றால் இணைந்து செயல்பட கட்டாயமாக யோசிப்போம்” என்று தெரிவித்தார்.

வணங்காமுடி

அப்பாவி விவசாயியும் அடேங்கப்பா சூதாட்டமும் ! 

முதல்வருடன் காலை உணவு சாப்பிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share