நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், இன்று (செப்டம்பர் 17) பெரியார் பிறந்தநாளை ஒட்டி சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலுக்குச் சென்று அவரது நினைவகத்துக்கு மாலை வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17, ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.
முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்படப் பல தலைவர்கள் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும், “சாதி மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர்” என்று கூறி பெரியாரை நினைவுகூர்ந்து இன்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில்தான், விஜய், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இன்று பிற்பகல் சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலுக்கு சென்றார்.
அங்குச் சென்று பெரியார் நினைவிடத்தில் மலர் மாலை வைத்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
விஜய் இதற்கு முன்பு தமிழகத்தில் உள்ள பல தலைவர்களது பிறந்தநாள்களுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அண்ணாவின் பிறந்தநாளான நேற்று முன்தினம்(செப்டம்பர் 15)கூட அவருக்கு மரியாதை செலுத்தியிருந்தார்.
ஆனால் இது வரை எந்த அரசியல் தலைவரின் நினைவிடத்திற்கும் நேரில் சென்று மரியாதை செய்ததில்லை. முதல் முறையாக பெரியாரின் நினைவிடத்துக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தியுள்ளார் விஜய்.
பெரியார் நினைவிடத்துக்கு விஜய் சென்றது அரசியல் வட்டாரங்களில் விவாதமாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
”பெண் டாக்டர்கள் இரவில் பணியாற்ற முடியாதா?” : மம்தா அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!
”நடக்காத விஷயங்களை பரப்பாதீங்க” : குமுறும் குக் வித் கோமாளி மணிமேகலை
பக்கிங்ஹாம் மர்டர்ஸ் : விமர்சனம்!