பெரம்பலூர் – ஆத்தூர் 4 வழிச் சாலைத் திட்டம் : அருண் நேரு எம்.பி கோரிக்கை!

Published On:

| By christopher

பெரம்பலூர் முதல் ஆத்தூர் வரையிலான 4 வழிச் சாலைத் திட்டத்தை விரைவுபடுத்தக் கோரி அத்தொகுதியின் திமுக எம்.பி. அருண் நேரு, மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

தஞ்சையில் இருந்து அரியலூர், பெரம்பலூர், வீரகனூர், ஆத்தூர், வாழப்பாடி வழியாக சேலத்திற்கும், சேலத்தில் இருந்து தஞ்சாவூருக்கும் நாள்தோறும் விரைவு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் தினமும் ஏராளமான பொதுமக்கள் பயணித்து வருகின்றனர்.

அதே போன்று அரியலூரில் இருந்து பல டன் சிமெண்ட் மற்றும் சரக்குகள் லாரிகளில் ஏற்றி சேலம் மற்றும் பிற மாவட்டங்களுக்கு ஆத்தூர் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. மேலும் தற்போது பெரம்பலூரில் மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவிகளும் இந்த வழியில் பேருந்துகளை பயன்படுத்தி வருவதால் இந்த சாலை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இதனையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு பெரம்பலூர்-ஆத்தூர் சாலையையும் விரிவுபடுத்திட மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.19 கோடியே 60 லட்சம்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றன. தொடர்ந்து பெரம்பலூர்-ஆத்தூர் சாலை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பெரம்பலூர் முதல் ஆத்தூர் வரையிலான 4 வழிச் சாலைத் திட்டத்தை விரைவுபடுத்தக் கோரி பெரம்பலூர் தொகுதி திமுக எம்.பி.,  மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேற்று (செப்டம்பர் 9) டெல்லியில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “பெரம்பலூர் முதல் ஆத்தூர் வரையிலான 4 வழிச் சாலைத் திட்டம் குறித்து  மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து கோரிக்கை வைத்தேன். இந்தச் நெடுஞ்சாலையானது உள்ளூர் விவசாயிகள் மற்றும் வணிகர்களின் வளர்ச்சிக்கு ஒரு பெரும் திருப்புமுனையாக அமைவதோடு அல்லாமல் சரக்கு போக்குவரத்தை அதிகரித்து அப்பகுதியில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

வேகப்பந்து வீச்சாளர் என்பதை மறந்த மனோஜ் பிரபாகர்… அதிரடி மன்னன் கையில் இலங்கை அணி!

தனுஷ் இயக்கத்தில் அருண்விஜய் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share