ஜனநாயகத்தின் மீதான அசைக்கமுடியாத நம்பிக்கை : தேர்தல் வெற்றி குறித்து மோடி பேச்சு!

Published On:

| By Kavi

ஜனநாயகத்தின் மீதான அசைக்கமுடியாத நம்பிக்கையை மக்கள் வைத்திருக்கிறார்கள் என்று தேர்தல் வெற்றி குறித்து மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று வானொலி மூலம் ஒலிபரப்பப்படும் ’மனதின் குரல்’ நிகழ்ச்சியில் நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாடுவார்.

மக்களவைத் தேர்தலையொட்டி கடந்த 3 மாதங்களாக இந்நிகழ்ச்சி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

கடைசியாக கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி பிரதமர் மோடி ’மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசினார்.

இந்நிலையில் மூன்றாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு இன்று (ஜூன் 30) மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி, “கடந்த பிப்ரவரி தொடங்கி இப்போது வரை, எப்போதெல்லாம் மாதத்தின் கடைசி ஞாயிறு வருகிறதோ, அப்போதெல்லாம் உங்களுடன் உரையாட முடியவில்லையே என்ற உணர்வு என்னை வருத்தியது” என்றார்.

தேர்தல் வெற்றி குறித்து பேசிய அவர், “நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நாட்டுமக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

2024ஆம் ஆண்டின் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாகும். உலகின் எந்த ஒரு தேசத்திலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை. 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள். தற்போது நான் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்களிப்பு முறையோடு தொடர்புடைய அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

அடுத்த மாதம் பாரீஸ் நகரத்தில் ஒலிம்பிக் போட்டி தொடங்கவுள்ளதை குறிப்பிட்டு பேசிய அவர், “ துப்பாக்கிச் சுடும் போட்டியில் நமது விளையாட்டு வீரர்களின் திறமை வெளிவரத் தொடங்கியிருக்கிறது. டேபிள் டென்னிஸில் நமது ஆடவர் மற்றும் பெண்களின் அணிகள் தகுதி பெற்றன. இந்திய ஷாட்கன் அணியில் நமது ஷூட்டர் பெண்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த முறை மல்யுத்தம் மற்றும் குதிரையேற்றத்தில் நமது அணியின் வீரர்கள், நாம் முன்பு போட்டியிடாத பிரிவுகளிலும் போட்டிபோட இருக்கிறார்கள்.

இந்த போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களை Cheer4Bharat என்ற ஹேஷ்டேக் மூலம் உற்காசப்படுத்துவோம்” என்று அழைப்பு விடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திடீரென சம்ஸ்கிருதத்தில் பேசிய மோடி, “இதற்கு காரணம் என்னவென்றால், இன்று சம்ஸ்கிருதத்தோடு தொடர்புடைய ஒரு சிறப்பான சந்தர்ப்பம். இன்று ஜூன் 30ஆம் தேதியன்று தான் ஆகாசவாணியின் முதல் சம்ஸ்கிருத செய்தியறிக்கை, 50 ஆண்டுகளுக்கு முன்பாக ஒலிபரப்பானது. 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்தச் செய்தியறிக்கையானது பலரை சம்ஸ்கிருதத்தோடு இணைத்து வைத்திருக்கிறது. நான் ஆல் இண்டியா ரேடியோ குடும்பத்தாருக்குப் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.

பண்டைய ஞானம் மற்றும் விஞ்ஞானத்தில் சம்ஸ்கிருதத்தின் மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது. இன்றைய காலத்தின் தேவை என்னவென்றால், நாம் சம்ஸ்கிருதத்துக்கு மதிப்பளிப்பதோடு, அன்றாட வாழ்க்கையிலும் இதை இணைத்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ராகுல், கோலி, ரோஹித்… இந்திய அணியிடம் போனில் பேசிய மோடி

மதுவில் கிக் இல்லை… துரைமுருகனின் பேச்சு தமிழகத்துக்கு தலைகுனிவு : பிரேமலதா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share