சென்னைக்கு வருகை தந்த அமித் ஷா சாலை மார்க்கமாக சென்றதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். people get tension over amit shah
முன்னாள் குடியரசு தலைவரும் மூத்த பாஜக தலைவர்களில் ஒருவருமான வெங்கையா நாயுடுவின் பேரனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே 5 நட்சத்திர தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (ஜனவரி 31) நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக துணை குடியரசுத்தலைவர் ஜக்தீப் தங்கர் தனது மனைவியுடன் வருகை தந்தார். அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி விமான நிலையத்தில் வரவேற்றார்.

தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தனி விமானம் மூலம் இரவு 7 மணியளவில் சென்னைக்கு வந்தார். அவரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அங்கிருந்து அவர் சாலை மார்க்கமாக கிண்டி வழியாக மகாபலிபுரத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அதே காரில் அண்ணாமலையும் உடன் சென்றார்.
வழி நெடுகிலும் சாலையின் இரு மார்க்கங்களும் பாஜக தொண்டர்கள் வரிசையாக காத்திருந்து அமித் ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் திருமண நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கிருந்து மீண்டும் சாலை மார்க்கமாக சென்னை விமான நிலையம் வந்த அமித் ஷா, இரவு 9.40 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

அதே போன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஆகியோரும் வெங்கையா நாயுடு பேரன் திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி மணமக்களை வாழ்த்தினர்.
நாட்டின் முக்கிய தலைவர்கள் வருகையால் நேற்று சென்னை விமான நிலையம் கிண்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் வழி நடுவிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால் வாகன ஒட்டிகள் பலரும் அவதிக்கு ஆளாகினர்.
குறிப்பாக அலுவலகத்திலிருத்து பலரும் வீட்டுக்கும் செல்லும் இரவு 7 மணியளவில் சென்னைக்கு வருகை தந்த அமித் ஷாவை வரவேற்க பாஜ தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வழிநெடுகிலும் ஆங்காங்கே கூடினர். இதனால் பணி முடிந்து 30 நிமிடங்களில் வீட்டிற்கு செல்லக்கூடியவர்கள் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகி அவதியுற்றனர்.