செந்தில் பாலாஜியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவ் : அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!

அரசியல்

செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத் துறையிடம் உச்ச நீதிமன்றம்  சரமாரி கேள்வி எழுப்பியிருக்கிறது.

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த அனைத்து மனுக்களும் உச்ச, உயர், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில் மீண்டும் அவர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு கடந்த 22ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது செந்தில் பாலாஜி தரப்பில், “உடல்நிலை பாதித்த நிலையில் செந்தில் பாலாஜி தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத் துறையினர் எப்போது விசாரித்து முடிப்பார்கள் என தெரியவில்லை.

எப்போது விசாரித்து முடிப்பார்கள் என்று கடவுளுக்குதான் தெரியும். எனவே செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது.

அப்போது அமலாக்கத் துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகததால் வழக்கு ஜூலை 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி நீதிபதிகள் அபய்.எஸ்.ஓகா, ஏ.ஜி. மஸி அமர்வில் வழக்கு மீண்டும் இன்று (ஜூலை 24) விசாரணைக்கு வந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி,   ‘செந்தில் பாலாஜி ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். இன்னும் எத்தனை காலம் அவர் சிறையில் இருக்க வேண்டும்” என்று வாதம் வைத்தார்.

தொடர்ந்து இவ்வழக்கு சோதனையில் கைப்பற்றப்பட்டபோது பென் டிரைவில் சர்ச்சைக்குரிய கோப்பு இல்லை, அமலாக்கத் துறை தரப்பில் புதிதாக கோப்புகள் சேர்க்கப்பட்டிருக்கிpறது என்ற செந்தில் பாலாஜி தரப்பின் வாதம் குறித்து அமலாக்கத் துறையிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

நீதிபதி ஓகா,”67 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை நடந்தது என  சொல்லப்படும் ஆவணங்கள் குறித்த கோப்பு எந்த சாதனத்தில் உள்ளது” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமலாக்கத் துறை வழக்கறிஞர் ஜோஹெப் ஹூசைன், “இது விசாரணை அமைப்பால் கைபற்றப்பட்ட ஆவணங்களில் ஒன்று” என சொல்ல, நீதிபதி ஓகா, “அது எந்த சாதனம்” என்று மீண்டும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமலாக்கத் துறை, ”இது மனுதாரரின் வீட்டில் கிடைத்த பென்டிரைவ் ” என்றார்.

தொடர்ந்து, “செந்தில் பாலாஜியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் தான் குறிப்பிட்ட அந்த ஃபைல் இருந்தது என்பதற்கான ஆதாரம் உள்ளதா? அதை காட்டுங்கள்” என்று நீதிபதி ஓகா கேட்க,

ED வழக்கறிஞர் ஹூசைன், “நாங்கள் நீதிமன்றத்தில் விண்ணப்பித்து பிஎம்எல்ஏ நீதிமன்றத்தில் இருந்து இந்த சாதனத்தில் பெற்றோம்” என்று பதிலளித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், “எந்த பென் டிரைவில் அந்த சாப்ட் ஃபைல் கண்டுபிடிக்கப்பட்டது என்று தான் நாங்கள் மீண்டும் மீண்டும் கேட்கிறோம்”என்று அதிருப்தியுடன் கேட்டனர்.

இதற்கு அமலாக்கத் துறை தரப்பில்,”ஒரு ஹெச்பி பென்டிரைவில் நம்பர் 5 ஆவதாக அந்த ஃபைல் இருந்தது” என்று பதிலளிக்கப்பட்டது.

உடனே நீதிபதிகள், “பென் டிரைவில் அந்த ஃபைல் இல்லை என்பதுதான் மனுதாரரின் வாதம். சிஎஸ்ஏசி என்ற பெயர் கொண்ட ஃபைல் அடங்கிய பென் டிரைவ் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பட்டதா?” என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து,  ‘அந்த ஃபைல் பென் டிரைவில் இருப்பதை உறுதிப்படுத்த தடயவியல் நிபுணர்கள் தான் பதில் கூறவேண்டும் என்பதை நாங்களும் அறிவோம். நீங்களும் நானும் நிபுணர்கள் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவ் போன்ற ஆதாரங்கள் பற்றி நாங்கள் 15 நிமிடங்களாக தெரிந்து கொள்ள கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் நீங்கள் அதற்கு பதில் அளிக்காமல் இருக்கிறீர்கள்.

இப்போதெல்லாம் நாங்கள் வழக்கறிஞர்களிடம் கேள்வி கேட்டால் அதை தனிப்பட்ட முறையில் விரோதமாக எடுத்துக் கொள்கிறீர்கள்” என்று அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், அமலாக்கத் துறை நாளை உரிய பதிலுடன் வர வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

‘தமிழ்நாடு’ பெயர் இடம்பெற 25 எம்.பி.க்களை கொடுத்தீங்களா?: அன்புமணி கேள்வி!

கல்வராயன் மலையை முதல்வர் அல்லது உதயநிதி பார்வையிட வேண்டும்! – உயர்நீதிமன்றம்

+1
0
+1
2
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

1 thought on “செந்தில் பாலாஜியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவ் : அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!

  1. எங்க சின்ராசுவ எதுத்து “யாரும்” எந்த கேள்வியும் கேட்டுறக்கூடாது, கருத்தும் சொல்லிறக்கூடாது, “யாரா” இருந்த்தாலும் சரி..ஆமா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *