பெகாசஸ் விவகாரம்: சந்திரபாபு நாயுடு மகனின் திடீர் கோரிக்கை!
பெகாசஸ் மென்பொருள் மூலம் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சந்திரபாபு நாயுடுவின் மகனும், முன்னாள் அமைச்சருமான நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகளின்படி, சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு 3வது முறையாக பிரதமர் நாளை (ஜூன் 9) பதவியேற்க உள்ளார். இந்த கூட்டணி அமைச்சரவையில் முக்கிய துறைகளை கேட்டு தெலுங்கு தேசம் கட்சி நிர்பந்தம் செய்துவருவதாக தேசிய ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.
இந்த நிலையில்தான், பெகாசஸ் உளவு மென்பொருள் குறித்து சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் பரபரப்பான கோரிக்கையை எழுப்பி இருக்கிறார்.
பெகாசஸ் உளவு மென்பொருள் என்பது இஸ்ரேல் பாதுகாப்புத்துறையின் என்.எஸ்.ஓ. அமைப்பின் தயாரிப்பாகும். இந்த நிறுவனம் பல நாடுகளுக்கு இந்த மென்பொருளை விற்பனை செய்து வருகிறது.
கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியா-இஸ்ரேல் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தில் பெகாசஸ் உளவு மென்பொருள் இருந்ததாக தகவல் வெளியாகின.
இதைத்தொடர்ந்து, மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக அரசு பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி இந்திய பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் என 300க்கும் மேற்பட்டவர்களின் செல்போனை உளவு பார்த்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அந்த வகையில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபுவின் மகனும், முன்னாள் அமைச்சருமான நாரா லோகேஷின் தொலைபேசியும் பெகாசஸ் மூலம் ஒட்டுக்கேட்கப்பட்டதாக கடந்த ஏப்ரல் மாதம் புகாரளித்திருந்தார்.
இந்நிலையில், தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டது தொடர்பாக புதிதாக மத்தியில் பொறுப்பேற்க உள்ள அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என நாரா லேகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய நாரா லோகேஷ், “பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் மூலம் எனது செல்போன் ஒட்டுக்கேட்கப்பட்டது. இது தொடர்பாக நான் காவல்நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் புகாரளித்தேன்.
இந்த புகாரின் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், முந்தைய ஆட்சி காலத்தில் விசாரணையின் மூலம் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் முக்கிய தரவுகள் அழிக்கப்பட்டுள்ளன. தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்பட்டது தொடர்பாக மத்தியில் பொறுப்பேற்க உள்ள புதிய அரசாங்கம் விசாரணை மேற்கொள்ளும் என நம்புகிறேன்.
எனது தொலைபேசி 2 முறை ஒட்டுக்கேட்கப்பட்டது. மேலும், ஆந்திராவில் பெகாசஸ் உள்ளதா என்பது குறித்து அறிக்கை சமர்பிக்கும் படி ஆந்திராவில் பதவியேற்கவுள்ள சந்திரபாபு நாயுடு ஏற்கனவே காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
இதில், ஆந்திராவில் பெகாசஸ் இருப்பது கண்டறியப்பட்டால், அது யாருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது என்பது பற்றிய அனைத்து விவரங்களையும் அளிக்குமாறு காவல்துறை தலைமை இயக்குநருக்கு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
பெகாசஸ் தொடர்பான அனைத்து தவறான நடவடிக்கைகளையும் உடனே தடுத்து நிறுத்தவும் காவல்துறைக்கு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சி தலைவர்களின் நடவடிக்கைகள் வேவு பார்க்கப்பட்டன என்று கடந்த மோடி அரசின் மீது பரபரப்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இப்போது பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சி தலைவரான சந்திரபாபு நாயுடுவின் மகனே இந்த கோரிக்கையை முன்வைத்து இருப்பது தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிமுக வாக்கு சதவிகிதம் சரிந்ததா? – எடப்பாடி தந்த விளக்கம்!
Gold Rate: சட்டென குறைந்த தங்கம், வெள்ளி விலை… எவ்வளவு தெரியுமா?