ஆகஸ்ட் மாதத்துக்கான பணவீக்கம் அதிகரித்ததை தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோர் மாறி மாறி கடுமையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தேசிய புள்ளியியல் அலுவலகம் கடந்த 12ம் தேதி ஆகஸ்ட் மாதத்துக்கான பணவீக்க விவரங்களை வெளியிட்டது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 7% உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6.71% ஆக இருந்தது.
முன்னதாக கடந்த 7ம் தேதி நடைபெற்ற அமெரிக்கா – இந்தியா தொழில் கவுன்சில் மாநாட்டில், ”இந்தியாவில் பணவீக்கம் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விஷயம் இல்லை.
வேலைவாய்ப்புகள், வருமானப் பகிர்விலுமே கவனம் செலுத்த வேண்டி உள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் பணவீக்கம் உயர்ந்துள்ளது.
நிதியமைச்சரின் வாய் முகூர்த்தம்!
பணவீக்கம் உயர்வை குறிப்பிட்டு முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் எம்பியுமான ப.சிதம்பரம் காட்டமான பதில் அளித்துள்ளார்.
அவரது ட்விட்டர் பக்கத்தில், “பணவீக்கம் என்னுடைய தலையான கவலை அல்ல என்று சில நாட்களுக்கு முன் நிதி அமைச்சர் அறிவித்தார்.
அவர் சொன்ன முகூர்த்தமோ என்னவோ, சில்லறைப் பணவீக்கம் 7% என்று உயர்ந்திருக்கிறது. உணவுப் பொருள்களின் பணவீக்கம் 7.62% ஆக உயர்ந்திருக்கிறது.
இப்பொழுது கூட நிதி அமைச்சர் பணவீக்கத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றால் அவர் சாமானிய மக்களிடமிருந்து மிக விலகி நிற்கிறார் என்ற எண்ணம் உறுதிப்படுகிறது” என்று தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையே 1991ல் காங்கிரஸ் அரசின் பொருளாதார தாராளமயமாக்கல் அரைவேக்காட்டு சீர்திருத்தம் என்று நிர்மலா சீதாராமன் விமர்சித்து இருந்தார்.
ஜீரணிக்க முடியாத ஜிஎஸ்டி!
தற்போது இதற்கு பதிலடியாக, “நல்லவேலையாக பணமதிப்பழிப்பு, பல அடுக்கு ஜி.எஸ்.டி போன்ற ஜீரணிக்க முடியாத உணவை மன்மோகன்சிங் பரிமாறவில்லை. பெட்ரோல், டீசல் மீது கொடூரமான வரிகளை விதிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், பல்கலையில் சமையல் மற்றும் ரொட்டி சுடும் படிப்பு படித்ததை தெரிவித்த நிதியமைச்சர் நிர்மலாவுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
தமிழகத்தில் மட்டும் 4 முதல்வர்கள்: எடப்பாடி ஆவேசம்!