ஆர்.என்.ரவி ஆளுநரா அல்லது அரசியல்வாதியா என்று திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஜூன் 5-ஆம் தேதி உதகையில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசியபோது, ”நாம் கேட்டாலோ அல்லது வெளிநாடுகளுக்கு சென்று தொழில் நிறுவனங்களை சந்தித்து பேசினாலோ முதலீடுகள் வராது.
தமிழ்நாட்டில் தொழில் கட்டமைப்புகளை உருவாக்கினால் மட்டுமே முதலீடுகளை பெற முடியும்” என்று முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணங்கள் மேற்கொண்டதை விமர்சித்து பேசியிருந்தார்.
ஆளுநரின் இந்த பேச்சுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் விமர்சனம் செய்திருந்தனர்.
சென்னை தேனாம்பேட்டையில் நேற்று நடைபெற்ற நகர்ப்புற நல்வாழ்வு மைய திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “கல்வியிலும் சுகாதாரத்திலும் தமிழ்நாடு தலை சிறந்த மாநிலமாக தலை நிமிர்ந்து நிற்கிறது. ஆனால் மாநிலத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கக்கூடிய ஒருவருக்கு மட்டும் அது புரியவில்லை.
அவர் திராவிட மாடல் ஆட்சியை ஏற்றுக்கொள்ளாத நிலையில் தொடர்ந்து தினம் தோறும் ஏதாவது ஒரு செய்தியை மக்களை குழப்ப கூடிய வகையில் கூறி வருகிறார். அவர் தொடர்ந்து இப்படி சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு எழுச்சி ஏற்படும்” என்று ஆளுநரின் விமர்சனத்திற்கு பதிலளித்திருந்தார்.
இந்தநிலையில் ஆளுநரின் பேச்சை திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆர்.என்.ரவி ஆளுநரா அல்லது அரசியல்வாதியா? டெல்லியில் உள்ள தனது பாஸ்களின் அஜெண்டாவை நிறைவேற்றுவதற்காக அவர் இங்கிருக்கிறாரா அவர் ஒரு சம்பிரதாய தலைவர் என்பதை அறிய வேண்டிய நேரமிது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
கோவில் வாசலில் நடிகைக்கு முத்தம்: பாஜக கண்டனம்!
மத்திய அமைச்சரை சந்தித்த சாக்ஷி மாலிக்: நடந்தது என்ன?