“தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் நலமுடன் உள்ளார்”: பழ. நெடுமாறன்

Published On:

| By Selvam

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பழ.நெடுமாறன் இன்று (பிப்ரவரி 13) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “சர்வதேச சூழலும் இலங்கையில் ராஜபக்‌சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பியிருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும், தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.

இந்த சூழலில் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் மிக்க நலமுடன் இருக்கிறார் என்பதை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு தெரிவித்து கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டு பரப்பப்பட்ட யூகங்களுக்கும் ஐயங்களுக்கும் இந்த செய்தி உறுதியாக முற்றுப்புள்ளி வைக்கும்.

தமிழீழ மக்களின் விடுதலைக்கான திட்டத்தை அவர் விரைவில் அறிவிக்க இருப்பதை உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

தமிழீழ மக்களும் உலக தமிழர்களும் அவருக்கு முழுமையான ஆதரவை அளிக்க முன்வர வேண்டும்.

விடுதலை புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவிற்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை.

இந்தியாவிற்கு எதிரான நாடுகள் எதுவாக இருந்தாலும் எந்த காலக்கட்டத்திலும் அவர்களிடம் எத்தகைய உதவியையும் பெறுவதில்லை என்பதில் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார்.

தற்போது இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்திய எதிர்ப்பு தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும் இந்துமாக்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப்பார்த்து, அதனை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய அரசை வேண்டுகிறோம்.

இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழக அரசும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளும் தமிழக மக்களும் ஒன்றுபட்டு நின்று தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு துணை நிற்குமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

களைகட்டும் காதலர் தினம்: விலையேறிய ரோஜா!

சிக்கிம்: அதிகாலையில் நிலநடுக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share