முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து இன்று (நவம்பர் 11) உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பிற்குப் பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நளினி உள்ளிட்ட 6 பேரின் விடுதலை குறித்து தமிழர் தேசிய முன்னணி கட்சியின் தலைவர் பழ.நெடுமாறன், மின்னம்பலத்திடம் இன்று (நவம்பர் 11) தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “உச்சநீதிமன்றம் 6 பேரை விடுதலை செய்தது எனக்கு மட்டும் அல்ல, மக்கள் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த வழக்கில் 26 தமிழர்களுக்கு ஒட்டுமொத்தமாகத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது இந்தியா முழுவதும் அதிர்ச்சியடைந்தது.
ஆனால் இந்த 26 உயிரையும் காப்பாற்றியாக வேண்டும் என்று என்னுடைய தலைமையில் ஒரு குழுவை அமைத்தோம். உச்சநீதிமன்றத்தில் 26 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தோம்.

இந்த வழக்கில் 19 பேருக்கு விடுதலை கிடைத்தது. மீதமிருக்கக்கூடிய 7 பேரில் 4 பேருக்குத் தூக்குத் தண்டனையும் 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
’4 பேரின் தூக்குத் தண்டனையைப் பரிசீலிக்க வேண்டும்’ என்று அப்போதைய ஆளுநரிடம் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவை அவர் தள்ளுபடி செய்து விட்டார்.
பின்னர், ’ஆளுநரின் உத்தரவு செல்லாது’ என்று மூத்த நீதிபதி சந்துரு நீதிமன்றத்தில் வாதாடித் தீர்ப்பு வாங்கிக் கொடுத்தார். நாங்கள் தொடர்ந்து 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஊர்வலங்கள், கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் ஆகியவற்றை நடத்தினோம்.
இதன் விளைவாக அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு மற்றும் தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசின் அமைச்சரவையும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானங்களை நிறைவேற்றி அனுப்பினர்.
ஆனால் ஆளுநர்கள் அதனைப் பொருட்படுத்தாமல் கிடப்பில் போட்டுவிட்டார்கள். இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் பேரறிவாளன் முதலில் விடுதலை செய்யப்பட்டார்.

தொடர்ந்து இந்த 6 பேர் விடுதலை செய்யப்படுவதில் தாமதம் ஏற்பட்டாலும், இறுதியில் 6 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். 26 தமிழக உயிர்களைக் காப்பாற்றினோம் என்ற பெருமை மட்டுமல்லாது, இந்த வழக்கில் துணை நின்ற அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இன்று விடுதலை செய்யப்பட்ட 6 பேரில் 4 பேர் ஈழத் தமிழர்கள்.
அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அவர்களால் இலங்கைக்கும் தற்போது போகமுடியாது. எனவே, இவர்களை முகாம்களில் தங்க வைக்காமல் அவர்களது உறவினர்களுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் இவர்களுக்கு நிதியுதவி அளிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்” என அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.
6 பேர் விடுதலை- திமுகவை எதிர்த்து கண்டனத் தீர்மானம்: காங்கிரஸ் ஜி.கே. முரளிதரன்