பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஜிபே மூலம் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்வதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவையில் அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், பாஜக சார்பில் அண்ணாமலை ஆகியோர் களமிறங்கியுள்ளனர். இதனால் கோவையில் மும்முனை போட்டி நிலவுகிறது.
நேற்று மாலையோடு தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது.
இன்னும் தேர்தலுக்கு சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் பண பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படை தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், கோவையில் போட்டியிடும் அண்ணாமலை ஜிபே மூலம் வாக்காளர்களுக்கு பணம் அனுப்புவதாக கோவை திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவையில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம், கோவை வடக்கு மாவட்ட திமுக சட்டத்துறை அணியின் அமைப்பாளர் பழனிசாமி புகார் அனுப்பியுள்ளார்.
அதில், “பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக அவரது தேர்தல் பணிமனையில் இருந்து வாக்காளர்களுக்கு அலைபேசியின் மூலம் அழைத்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டு வாக்காளர்களுக்கு GPay மூலம் பணம் அனுப்பி வருகிறார்.
மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி நேற்று மாலையுடன் தொகுதிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் தொகுதியை விட்டு வேளியேறி இருக்க வேண்டும்.
ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக சட்டவிரோதமாக கோவை நாடாளுமன்ற பாஜக தேர்தல் அலுவலகமான அவினாசி சாலை அரவிந்த் கண் மருத்துவமனை அருகில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைசேர்ந்தவர்கள் தற்போதும் தங்கி இருந்து வாக்காளர்களுக்கு போன் செய்து தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கோரி வருகிறார்கள்.
அதுமட்டுமின்றி GPay மூலம் ஓட்டுக்கு பணம் வினியோகம் செய்து வருகிறார்.
சென்னையைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், கரூரைச் சேர்ந்த அவரது மைத்துனர் சிவக்குமார் சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் ஆகியோர் பாஜக பணிமனையில் தங்கியுள்ளனர். வெளியூரைச் சேர்ந்த கிரண்குமார், ஆனந்த், பிரசாந்த் ஆகியோரும் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர்.
இவர்களை தொகுதியைவிட்டு வெளியேற்றியும் வாக்காளர்களுக்கு ஆன்லைன் மூலம் பனம் விநியோகிப்பவர்கள் மீதும் இவர்களை வழிநடத்தும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
IPL 2024: முக்கிய வீரர் விலகல்… மாற்று வீரரை எடுத்தது சென்னை
தமிழகத்தில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை : சத்யபிரதா சாஹு