pawan kalyan tirupati laddu

திருப்பதி லட்டு… ‘சனாதன தர்ம ரக்ஷ்னா’ வாரியம் அமைக்க பவன் கல்யாண் கோரிக்கை!

அரசியல்

இந்தியா முழுவதும் திருப்பதி லட்டு விவகாரம் பெரும் பேசுபொருளாகியுள்ள நிலையில், இனியும் சனாதன தர்மம் இழிவுப் படுத்தப்படக்கூடாது, அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண், தனது எக்ஸ் தளப்பக்கத்தில் இன்று (செப்டம்பர் 20) பதிவிட்டுள்ளார்.

ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சிக் காலத்தில் (2019-2024), திருப்பதி லட்டு செய்வதற்காக விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் தரமற்ற பொருட்கள் லட்டு செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று (செப்டம்பர் 19) குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகள் தேசிய அளவில் விவாதப் பொருளான நிலையில், தெலுங்கு தேசக் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் அனம் வெங்கட ரமண ரெட்டி நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அந்த சந்திப்பில், திருப்பதி லட்டு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட நெய்யைப் பரிசோதித்த NDDB CALF ஆய்வகத்தின் அறிக்கையை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் லட்டு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட நெய்யில், மாட்டுக் கொழுப்பு, மீன் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு, மீன் எண்ணெய், சோயா பீன், சூரிய காந்தி எண்ணெய் ஆகியவை கலந்திருந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்று இரவு ஹிந்து ஐடி செல் (Hindu IT Cell) என்ற அறக்கட்டளை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் , “புனித பிரசாதமான திருப்பதி லட்டில் கலப்படம் செய்ததின் மூலம் திருப்பதி தேவஸ்தானம் மிகப் பெரிய பாவத்தையும் , துரோகத்தையும் செய்துள்ளது.

தயவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை தாமதிக்காமல் கைது செய்ய வேண்டும்” என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும் துணை முதல்வர் பவன் கல்யாணையும் டேக் செய்து பதிவிட்டிருந்தது.

இதற்கு பதிலளித்துள்ள பவன் கல்யாண் “திருப்பதி பாலாஜி பிரசாதத்தில் விலங்குக் கொழுப்பு, மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு மற்றும் மாட்டிறைச்சிக் கொழுப்பு போன்ற விலங்கு கொழுப்புகள் கலந்திருப்பதைக் கண்டு நாம் அனைவரும் மிகவும் கவலையடைந்துள்ளோம்.

ஜெகன் மோகன் ரெட்டி அரசால் அமைக்கப்பட்ட திருப்பதி தேவஸ்தான வாரியம் இது குறித்துப் பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். ஆந்திர அரசாங்கம் இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

மேலும் இந்த நிகழ்வு, கோவில் நிர்வாகத்தில் உள்ள பிரச்சினைகள் மற்றும் இந்து தர்மம் சார்ந்த பிற பிரச்சினைகளையும் எடுத்துக்காட்டியுள்ளது.

பாரதத்தில் (இந்தியாவில்) உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள பிரச்சினைகளை விசாரிப்பதற்கு “சனாதன தர்ம ரக்ஷ்னா வாரியம்” அமைப்பதற்கான நேரம் வந்துவிட்டது.

இந்த வாரியம் அமைப்பது பற்றி இந்தியா முழுக்க உள்ள மத தலைவர்கள், மக்கள், நீதித்துறையைச் சார்ந்தவர்கள் தேசிய அளவில் விவாதிக்க வேண்டும்.

நாம் அனைவரும் ஒன்று கூடி ‘சனாதன தர்மம்’ அவமதிக்கப்படுவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இந்திய அளவில் இந்த பிரச்சினை பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

இந்தியாவிலேயே அதிக விலை கொண்ட விமானம்… அம்பானி வாங்கியது ஏன்?

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி? – செய்தியாளர் கேள்விக்கு டென்ஷனான ரஜினி

+1
1
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0