சந்திரபாபு நாயுடு கைது: பவன் கல்யாண் சாலையில் படுத்து போராட்டம்!

அரசியல்

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை, சந்திக்க அனுமதி மறுத்ததால் நடிகர் பவன் கல்யாண் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை நேற்று காலை 6 மணியளவில் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) போலீசார் கைது செய்தனர்.

ஊழல் தடுப்புச் சட்டம் 1988ன் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடு மீது ஏபிசி 120(பி), 166, 167, 418, 420, 465, 468, 201, 109 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Skill Development Scam: AP CID quizzes Chabdrababu Naidu-Telangana Today

விஜயவாடாவில் உள்ள சிஐடி அலுவலகத்திற்கு சந்திரபாபு நாயுடு அழைத்துச் செல்லப்பட்டு அவரிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து, அதிகாலையில் விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

பவன் கல்யாண் போராட்டம்!

இதற்கிடையே, சந்திரபாபு நாயுடு கைது நடவடிக்கைக்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

மேலும், சந்திரபாபுவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிப்பதற்காக பேகம்பேட் விமான நிலையத்தில் இருந்து, சிறப்பு விமானத்தில் விஜயவாடாவில் உள்ள கன்னவரம் விமான நிலையத்திற்கு செல்ல பவன் கல்யாண் புறப்பட்டார். ஆனால், சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அவர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

தொடர்ந்து, சாலை மார்க்கமாக அவர் விஜயவாடா நோக்கி புறப்பட்டபோது, அனுமஞ்சிபல்லை எனும் பகுதியில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இதனை கண்டித்து காரில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடந்து சென்ற பவன் கல்யாண், பின்னர் சாலையிலேயே படுத்து தூங்கி தனது எதிர்ப்பை பதிவு செய்தார். அவருடன் ஏராளமான  ஜனசேனா தொண்டர்களும்  போராட்டத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து போலீசாரின் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்த அவர், பாதுகாப்பு நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்திரபாபு நாயுடு கைதை அடுத்து ஆந்திராவில் பெரும்  பதற்றம் நிலவுகிறது. தெலுங்கு தேசம் கட்சியினரின்  போராட்டத்தால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக வணிக வளாகங்கள் மூடப்பட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

காமெடியில் இருந்து விலகி விட்டாரா சி.எஸ்.அமுதன்?

1,500 பழைய பேருந்துகள் விரைவில் மாற்றப்படும்: அமைச்சர் சிவசங்கர்

 

 

+1
1
+1
2
+1
0
+1
3
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *