சென்னை மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோவில் வளாகத்தில் கடுமையான அடக்குமுறை நிலவியதாக ஆளுநர் ரவி முன்வைத்த குற்றச்சாட்டை, அக்கோவிலின் பட்டாச்சாரியார் மோகன் மறுத்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு இன்று காலை சென்னை மேற்குமாம்பலம் கோதண்டராமர் கோவிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார்.
அப்போது அங்குள்ள பூசாரிகள் மற்றும் கோவில் ஊழியர்களிடம் ஒருவித பயமும், அச்ச உணர்வும் இருந்ததாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து ஆளுநர் வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், “இன்று காலை சென்னை, மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன்.
இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது. பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது.
நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது.
பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது.” என்று தெரிவித்திருந்தார்.
ஆளுநரின் குற்றச்சாட்டை மேற்கு மாம்பல கோதண்டராமர் கோவில் பட்டாச்சாரியர் மோகன் மறுத்துள்ளார்.
இதுகுறித்து புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்,
“கோதண்டராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய இன்று காலை 8 மணிக்கு ஆளுநர் ரவி வந்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவருக்கு கோவிலின் தல வரலாறு மற்றும் சிறப்புகள் எடுத்துரைக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. அடக்குமுறை எதுவும் நடைபெறவில்லை. ஆளுநருக்கான பாதுகாப்பை பின்பற்றி அவருக்கான வரவேற்பை முறையாக அளித்தோம்” என்று தெரிவித்துள்ளார்.
அயோத்தி குடமுழுக்கை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கோவில்களில் பஜனை, சிறப்பு பூஜை, நேரடி ஒளிபரப்பு செய்ய அரசு அனுமதி அளிக்கவில்லை என்று பாஜக தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வரும் நிலையில், ஆளுநரின் இந்த பதிவு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தனியார் கோவில்களில் அயோத்தி நேரலைக்கு அனுமதி தேவையில்லை: உயர்நீதிமன்றம்!