அவ்வப்போது சர்ச்சைகளையும், அரசியல் பரபரப்புகளையும் கிளப்புவது தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவியின் ராமநாதபுரம் விசிட் அரசியல் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
ஆளுநர் ஆர்.என்.ரவி ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மூன்று நாள் பயணமாக செல்கிறார் என்று முதலில் தகவல் வெளியான நிலையில், நேற்று (ஏப்ரல் 17) ஆளுநர் மாளிகைச் செயலகம் ஆளுநர் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இரண்டு நாள் பயணம் என்று நிகழ்ச்சி நிரலை வெளியிட்டது.
அதன்படி 18, 19 என இரு நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்துக்குச் செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இன்று (ஏப்ரல் 18) சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் செல்லும் ஆளுநர் மதுரையில் இருந்து கார் மூலமாக ராமேஸ்வரம் செல்கிறார்.
ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பின்படி இன்று காலை 11 முதல் 12.30 வரை மண்டபம் கேந்திரியா வித்யாலயா மாணவர்களுடன் ராமேஸ்வரத்தில் கலந்துரையாடுகிறார் ஆளுநர். அதன் பின் ஒரு மணி வரை கேந்திரிய வித்யாலயா ஆசிரியர்களுடனும், இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில், மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானிகளோடு கலந்துரையாடுகிறார் ஆளுநர்.
இன்று மாலை தேவிப்பட்டினத்திலுள்ள நவகிரக கோயிலுக்கு சென்று வழிபடுகிறார் ஆளுநர். அதன் பின் தேவிப்பட்டினத்திலுள்ள தாய் ரத்தின மஹாலில் பல்வேறு மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இதன் பின் நாளை ஏப்ரல் 19 ஆம் தேதி காலை உத்திரகோசமங்கையில் இருக்கும் மங்களநாத சுவாமி கோயிலுக்கு சென்று வழிபடுகிறார் ஆளுநர் ரவி. பின் நாளை மாலை தேவேந்திர குல வேளாள மக்களின் அடையாளமாக கருதப்படுகிற பரமக்குடியில் இருக்கும் இமானுவேல் சேகரனின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி, அதன் பின் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்துக்கும் சென்று மரியாதை செலுத்துகிறார்.
ஆளுநரின் இந்த இரு நிகழ்வுகளும் அரசியல் ரீதியான முக்கியத்துவம் கொடுத்து தென் மாவட்டத்தில் பேசப்படுகின்றன. ஆளுநரின் வருகைக்கு ஏற்கனவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் இந்த இரு பகுதிகளைச் சுற்றிலும் கண்காணிப்பு மேலும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தேவர் குருபூஜையன்று பசும்பொன்னுக்கும், இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று பரமக்குடிக்கும் பல்வேறு அரசியல் தலைவர்கள் சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர். ஆனால் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ்நாடு ஆளுநர் இவ்விரு இடங்களுக்கு வருகை தருவதாக சொல்கிறார்கள் ராமநாதபுரம் அரசியல் வட்டாரத்தில். குரானா, சுர்ஜித் சிங் பர்னாலா போன்ற தமிழ்நாட்டு ஆளுநர்களும், பிற மாநில ஆளுநர்களும் ராமேஸ்வரம் வரும்போது தேவர் நினைவிடத்துக்கு வந்து சென்றிருக்கிறார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரே நாளில் பரமக்குடி இமானுவேல் சேகரன், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடங்களுக்கு தமிழ்நாட்டின் ஆளுநர் ஒருவர் பயணம் மேற்கொள்வது இப்போதுதான் என்கிறார்கள்.
இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, “ பிரதமர் மோடி வரும் மே அல்லது ஜூன் மாதம் தமிழ்நாடு வர இருக்கிறார். அப்போது அவர் ராமேஸ்வரம் வருகிறார். மோடி வருகையின் போது பரமக்குடி, பசும்பொன் விசிட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வருடம் மோடி தேவர் குருபூஜைக்கு பசும்பொன் வருவதாக ஒரு தகவல் பரவியது. ஆனால் அன்றைய தினம் ட்விட் மூலம் மரியாதை செலுத்தினார். இந்த நிலையில் பிரதமரின் ராமேஸ்வர பயணத்துக்கான முன்னோட்டமாகத்தான் இப்போது ஆளுநரின் வருகை பார்க்கப்படுகிறது” என்கிறார்கள்.
–ஆரா
இந்தியாவில் முதன்முறையாக தண்ணீருக்கு தனி பட்ஜெட்!