கட்சியின் சின்னம், பெயரை பயன்படுத்தியது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தலைமையகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமான பிறகு ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு நடத்தி, ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கினார்.
அதிமுகவுக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிவித்தார். மேலும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி செயல்பட்டு வருகிறார்.
கட்சிக்கு உரிமை கோருவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தொடர்ந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று(டிசம்பர் 20) அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார். இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து ஓபிஎஸ்க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும் உள்ளனர்.
உயர்நீதிமன்றம் இதனை ஏற்றுக்கொண்ட நிலையில், ஓபிஎஸ் தொடர்ந்து கட்சியின் கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்று பயன்படுத்தி வருவது சட்டவிரோதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கட்சியின் லெட்டர் பேட் மற்றும் சீல் போன்றவற்றை முறைகேடாக பயன்படுத்தி அதிமுக தலைமையக அறிவிப்பு என்று கூறுவதற்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கட்சியின் பொறுப்பு எடப்பாடி பழனிசாமி வசம் இருப்பதால், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் இது போன்று செயல்படுவதற்கு உரிமையில்லை என்றும், இது குறித்து விளக்கம் அளிக்குமாறும் நோட்டீஸ் (Legal notice) விடுக்கப்பட்டுள்ளது.
கலை.ரா
’மல்லாக்க படுக்க மாட்டேன்’ நயன்தாரா சொன்ன அதிர்ச்சி காரணம்!
மீண்டும் ஆம்புலன்சிற்கு வழிவிட்ட முதல்வர் கான்வாய்!