இம்மானுவேல் சேகரனின் 65-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் 5000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு மாதத்திற்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
மேலும், இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு வருபவர்கள், அவர்களுடைய சொந்த வாகனத்தில் வர வேண்டும், ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது, பட்டாசு வெடிக்கக்கூடாது, காவல்துறை அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும், கோஷங்களை எழுப்பக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
முதலாவதாக, இம்மானுவேல் சேகரன் குடும்ப உறுப்பினர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
அடுத்து திமுக சார்பில் அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அவருக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜலெட்சுமி, ராமநாதபுரம் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
செல்வம்
பரமக்குடியில் உதயநிதி: திமுகவின் தென் மாவட்ட கணக்கு!