பணி நிரந்தரம் செய்யக் கோரி போராட்டம் நடத்திய பகுதி நேர அரசு பள்ளி ஆசிரியர்கள் போலீஸாரால் இன்று (டிசம்பர் 10) கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின் போது 16,000 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் அதிமுக ஆட்சி காலகட்டத்திலேயே தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பல போராட்டங்களை நடத்தினர்.
அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், ’நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்’ என்று கூறியிருந்தார். 2021 தேர்தலில் திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் 181 ஆவது வாக்குறுதியாக இது இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதனால் அவர்கள், பல போராட்டங்கள் நடத்தினர்.
கடந்த 6ஆம் தேதி பகுதி நேர ஆசிரியர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், டிசம்பர் 10 ஆம் தேதி கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக பகுதி நேர ஆசிரியர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
இது குறித்து அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பாபு, “தற்போது நாங்கள் ரூ.12,500 தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகிறோம். தொடக்கத்தில் 16000 எண்ணிக்கையில் இருந்த பகுதி நேர ஆசிரியர்களில் சுமார் 12000 பேர் தான் தற்போது பணியில் இருக்கிறோம்.
மேலும் விரைவில் ஆயிரத்திற்கும் அதிகமான பகுதி நேர ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற உள்ளனர். திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி 181இல் கூறியபடி பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என்றார்.
இந்த நிலையில் இன்று காலை ஏழு மணி முதல் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ராஜரத்தினம் அரங்கம் வரை நூற்றுக் கணக்கான பகுதி நேர ஆசிரியர்கள் கூடத் தொடங்கினர். கோட்டையை நோக்கி செல்ல போலீஸ் அனுமதி அளிக்காததால், அவர்கள் ராஜரத்தினம் அரங்கம் அருகே பதாகைகள் ஏந்தியும், தூக்கில் தொங்குவது போலும் போராட்டம் நடத்தி வந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் முருகதாஸ், பாபு உள்ளிட்ட ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர்.
-அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
நான் அதானியை சந்திக்கவில்லை : சட்டப்பேரவையில் பதிலளித்த ஸ்டாலின்
ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து விலகினாரா?http://அப்பாவை கேட்கச் சொன்ன உதயநிதி