தேர்தல் நெருங்கிவிட்டதால் பார்ட் டைம் அரசியல்வாதிகள் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்தார்.
இன்று (ஏப்ரல் 2) வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கலந்துகொண்டார்.
அரக்கோணம் வேட்பாளர் ஜெகத்ரட்சகன் , வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோரை அறிமுகப்படுத்தி வாக்குசேகரித்தார்.
அப்போது பேசிய அவர், “தேர்தல் வந்துவிட்டதால், தமிழ்நாட்டிற்குச் சில ‘பார்ட்-டைம்’ அரசியல்வாதிகள் வருகிறார்கள். யாரைச் சொல்கிறேன் என்று உங்களுக்கே தெரியும். யார்? பிரதமர் மோடி. பொய்களையும், அவதூறுகளையும் துணைக்கு அழைத்துக் கொண்டு தேர்தல் சீசனிற்கு மட்டும் வருவார். வெள்ளம் வந்தால் வர மாட்டார். நிதி கேட்டால் கொடுக்க மாட்டார். சிறப்புத் திட்டம் கேட்டால் செய்ய மாட்டார். இப்படி, மக்களை ஏமாற்றி – தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் செய்து தராமல் – துரோகம் செய்த – பார்ட்-டைம் அரசியல்வாதிகளை நீங்கள் புறக்கணிக்க வேண்டும். தேர்தல் முடிந்ததும் தமிழ்நாட்டுப் பக்கமே வரமாட்டார்கள்” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “ அ.தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, சிறுபான்மையின மக்களின் முதுகில் குத்தினார் பழனிசாமி. இப்போது பா.ஜ.க.வுடன் கள்ளக்கூட்டணி வைத்துக் கொண்டு, புதியதாக சிறுபான்மையினர்மேல் அக்கறை வந்தது போன்று நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
இப்போது சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துகிறோம் என்று மோடியும் – அமித்ஷாவும் சொல்லியிருக்கிறார்கள். இந்தச் சட்டம் 2019-இல் மாநிலங்களவையில், அ.தி.மு.க.வும் – பா.ம.க.வும் ஆதரித்து ஓட்டு போட்டதால்தான், இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவிற்கே வந்திருக்கிறது! எவ்வளவு பெரிய துரோகத்தைச் சிறுபான்மையின மக்களுக்கு செய்துவிட்டு, இப்போது அந்தச் சட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம் என்று சொல்வது, பசப்பு நாடகம் இல்லையா? இதில் கடந்த 5 ஆண்டில் நம்முடைய எம்.பி.க்கள் என்ன செய்தார்கள் என்று கேட்கிறார்கள்? ஒன்றிய அரசு மக்கள் விரோதச் சட்டங்கள் கொண்டு வந்தபோது, நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எவ்வளவு போராட்டம் நடத்தினோம்!
உதாரணத்திற்கு, இந்த சி.ஏ.ஏ. சட்டம் வந்தபோது, தி.மு.க.வும் தோழமைக் கட்சிகளும்தான் உறுதியாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து, எதிர்த்து வாக்களித்தது. பழனிசாமி என்ன செய்தார்? நாடாளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்தது மட்டுமல்ல, “அதில் எந்த முஸ்லிம் பாதிக்கப்படுகிறார்” என்று, அட்டர்னி ஜெனரல் மாதிரி ’லா பாய்ண்ட்’ எல்லாம் பேசினார்!
இந்தச் சட்டத்தை எதிர்த்து அமைதியாகப் போராடிய மக்கள்மேல், பெண்கள் – குழந்தைகள் என்றுகூட பார்க்காமல் லத்தி சார்ஜ் செய்தார். இந்தச் சட்டத்தை எதிர்த்துச் சென்னையில் போராடிய என் மேலும் – ப.சிதம்பரம் – திருமாவளவன் – பாலகிருஷ்ணன் – ஜவாஹிருல்லா – உதயநிதி உள்ளிட்ட எட்டாயிரம் பேர் மேல் ஒரே நேரத்தில் F.I.R. போட்டு மோடிக்கும் – அமித்ஷாவுக்கும் தன்னுடைய விஸ்வாசத்தை வெளிக்காட்டினார் பழனிசாமி.
ஒரு நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குறுதி கொடுத்து, பொடா சட்டத்தை ரத்து செய்தோம்! ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு, சி.ஏ.ஏ.-வும் ரத்து செய்யப்படும்!
“நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கிறோம்… எப்படி மோடியை எதிர்க்க முடியும்… ஆளுங்கட்சியாக இருந்தால் எதிர்ப்பேன்” என்ற வியாக்கியானம் பேசுகிறார்.
கரகாட்டகாரன் படத்தில் கவுண்டமணி காமெடி வருமே, “நாதஸ் திருந்திட்டான்…” என்று அதுபோன்று இப்போது பேசிக் கொண்டு, வாக்கு கேட்டுக் கொண்டு இருக்கிறார்! அ.தி.மு.க அடிமைக் கூட்டம் போன்று, பா.ஜ.க.வை எதிர்க்க வக்கில்லாமல், அதற்கு எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்று சாக்கு போக்கு சொல்லிக் கொண்டிருக்க மாட்டோம்” என்றார்.
கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசிய அவர், “இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்ததைப் பற்றி இப்போது பா.ஜ.க. பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், இது அவர்களுக்கு எதிராகவே திரும்பிவிட்டது. தேன்கூட்டில் கையை வைத்தது போல, இப்போது பா.ஜ.க. மாட்டிக் கொண்டு தவிக்கிறார்கள்.
2014-இல் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. உச்சநீதிமன்றத்தில் என்ன கூறியது? “கச்சத்தீவு மீண்டும் வேண்டும் என்றால் இலங்கை அரசுடன் போரில்தான் ஈடுபட வேண்டும்” என்று உச்சநீதிமன்றத்தில் கூறியது.
இந்தப் பத்தாண்டு காலத்தில் பிரதமர் மோடி, எத்தனை முறை இலங்கைக்குப் பயணம் செய்தார். அப்போதெல்லாம் ஒருமுறையாவது கச்சத்தீவை மீண்டும் கேட்டிருக்கிறாரா? இலங்கை அதிபரைச் சந்தித்தபோதெல்லாம் கச்சத்தீவு இந்தியாவிற்குதான் சொந்தம் என்று சொல்லியிருக்கிறாரா? அப்போதெல்லாம் கச்சத்தீவு மோடியின் ஞாபகத்திற்கு வரவில்லை. நேரு காலத்தில் நடந்தது – இந்திரா காலத்தில் நடந்தது எல்லாம் ஞாபகம் இருக்கும் மோடிக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சி ஞாபகம் இருக்கிறதா?
கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் 26-ஆம் நாள் சென்னைக்கு வந்து, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டீர்கள். அந்த நிகழ்ச்சியில், ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையைத் தர வேண்டும். நீட் விலக்கு அளிக்க வேண்டும் என்று சில கோரிக்கைகளை வைத்தேன்… அந்தக் கோரிக்கைகளில் முதல் கோரிக்கையாக நான் வைத்ததே, “கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்… மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்” என்றுதான் கோரிக்கை வைத்தேன். ஞாபகம் இருக்கிறதா? அந்தக் கோரிக்கை மனுவையாவது இதுவரை படித்துப் பார்த்தீர்களா… எத்தனை கதைகள்… எத்தனை நாடகங்கள்…
முதலில், RTI விண்ணப்பம் செய்த 4 வேலை நாட்களில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் பற்றி எப்படி தகவல் கொடுத்தார்கள்?
இரண்டாவது, இப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் ஜெய்சங்கர், “2015-இல் வெளியுறவுத் துறைச் செயலாளராக இருந்தபோது கொடுத்த தகவலில், கச்சத்தீவு இந்தியாவின் பகுதியாக எப்போதும் இருந்ததில்லை” என்று, பா.ஜ.க. அரசு தகவல் கொடுத்திருக்கிறது. இப்போது தேர்தல் வருகிறது என்று தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி தகவலை மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள். இந்த அந்தர் பல்டி ஏன்?
மூன்றாவது, கடந்த பல ஆண்டுகளாக கச்சத்தீவு பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோதெல்லாம், அதற்கு உரிய பதிலைச் சொல்லவில்லை. எத்தனையோ பேர் R.T.I. விண்ணப்பம் செய்தபோதும் தெளிவான தகவல்களைக் கொடுக்கவில்லை.
உச்சநீதிமன்ற விசாரணையில் இருக்கிறது என்று பதில் சொல்லாமல் இருந்த பா.ஜ.க. அரசு – இப்போது R.T.I. மூலம் எப்படி தவறான தகவலைக் கொடுத்தார்கள்? பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒரு தனிநபருக்கு எப்படி, வெளியுறவுத் துறை நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களைக் கொடுத்திருக்கிறார்கள்?
நான்காவது, கச்சத்தீவிற்காக இப்போது திடீர் கண்ணீர் வடிக்கும் பிரதமர் மோடி, கடந்த பத்தாண்டுகளில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மீனவர்கள் கைது, துப்பாக்கிச்சூடு என்று நடந்ததே? ஒரு கண்டிப்பாவது இலங்கைக்குச் செய்தாரா? ஏன் செய்யவில்லை?
இப்போது, சீனா பற்றியாவது வாய்திறந்தாரா? அருணாசலப் பிரதேசத்தின் பல பகுதிகளுக்குச் சீனா சொந்தம் கொண்டாடுகிறதே? 30-க்கும் மேற்பட்ட நம்முடைய இடங்களுக்குச் சீனமொழியில் பெயர்களை வெளியிட்டிருக்கிறதே? அதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்? இலங்கையைக் கண்டிக்கவும் துணிச்சல் இல்லை, சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை. இந்த லட்சணத்தில் நீங்கள் கச்சத்தீவைப் பற்றிப் பேசலாமா” என்று கேள்வி எழுப்பினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
கச்சத்தீவை பற்றி பாஜக பேசுவது வேடிக்கையானது : எடப்பாடி பழனிசாமி
பிரபல குணச்சித்திர நடிகர் விஸ்வேஸ்வர ராவ் காலமானார்!