நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படுமா, இல்லையா என்பது பற்றி மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேட்டி அளித்துள்ளார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் பற்றி குழு அமைத்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழுவை அமைத்து விரைவில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
அடுத்த ஆண்டு மே மாதம் பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து இக்குழு ஆராய்ந்து வருகிறது.
இதுதொடர்பாக இந்தியா டுடே ஊடகத்துக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பேட்டி அளித்துள்ளார்.
“ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுவில் காங்கிரஸைச் சேர்ந்த அதிர் ரஞ்சன் சவுத்ரி இடம் பெற்றுள்ளார். ஏனென்றால் எதிர்க்கட்சிகளின் குரல்களை கேட்கவும் மத்திய அரசு விரும்புகிறது.
பொதுத் தேர்தலை முன்கூட்டியோ அல்லது தாமதமாக நடத்தவோ மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை. அதுபோன்று வரக்கூடிய மாநில தேர்தல்களையும் ஒத்திவைக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தேர்தல்கள் தாமதமாக நடத்தப்படும் அல்லது முன்கூட்டியே நடத்தப்படும் என்று சொல்வதெல்லாம் ஊடகங்களின் ஊகம்” என்று கூறியுள்ளார் அனுராக் தாகூர்.
செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்துக்கு மத்திய அரசு பெரிய திட்டத்தை வைத்திருக்கிறது என்று தெரிவித்த அமைச்சர் அனுராக் தாகூர், “சிறப்பு அமர்வின் நிகழ்ச்சி நிரலை உரிய நேரத்தில் நாடாளுமன்ற விவகார அமைச்சர் வெளியிடுவார்” என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர், “ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் என்ன பிரச்சனை உள்ளது? ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால், நேரமும் பணமும் மிச்சமாகும், அப்படி சேமிக்கப்படும் நேரத்தை ஏழைகளுக்காகவும், தேசத்தின் வளர்ச்சிக்காகவும் அரசு செலவழிக்கும்” என்றார்.
பிரியா
“காக்கி வண்ண சட்டை, கல்லா லுங்கி” : பவன் கல்யாண் பட அப்டேட்!
புகைப்படம் இருக்கா, இன்னும் எத்தனை வருடம் பேசுவீர்கள்?: சீமான் ஆவேசம்!