நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதனை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் 27ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இன்று காலை முதல் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய வேட்பாளர்கள் இன்று (மார்ச் 25) வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
திமுகவினரின் வேட்புமனுத் தாக்கல்:
அதன்படி, தமிழகத்தில் ஆளும் திமுக கட்சி சார்பாக வேலூர் தொகுதியில் போட்டியிடும் கதிர் ஆனந்த் இன்று தனது தந்தையும் அமைச்சருமான துரைமுருகன் முன்னிலையில் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் உடனிருந்தார்.
வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் , இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
திருப்பூர் மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சுப்பராயன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவருடன் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், திமுக தெற்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதே திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் முருகானந்தம், திருப்பூரில் பின்னலாடை தொழில் நலிவடைந்து விட்டதாகவும், எம்.பி. ஆக இருக்கும் சுப்பராயன் பின்னலாடை தொழிலாளர்களுக்கு குரல் கொடுக்க தவறி விட்டதாகக் கூறி நூல் கண்டுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோ, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதேபோல், அதிமுக சார்பில் தென்சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன், இன்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக மற்றும் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியனும், தமிழிசை செளந்தரராஜனும் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்தபோது ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.
விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
விஜய பிரபாகரன் வேட்புமனுத் தாக்கல் செய்தபோது அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உடன் இருந்தார்.
கோவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிங்கை ராமச்சந்திரன், அம்மாவட்ட ஆட்சியரிடம் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
சிங்கை ராமச்சந்திரன் வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உடன் இருந்தார்.
தொடர்ந்து, ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் விழுப்புரத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
பாஜக சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன், நெல்லை தொகுதியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வடசென்னை தொகுதியில் பாஜக வேட்பாளர் ஆர்.சி.பால்கனகராஜ், ராயபுரம் மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வமும் இன்று தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இன்னும் பல இடங்களில் வேட்புமனுத் தாக்கல் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய 27ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் அதிகமானோர் வேட்புமனுத் தாக்கல் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களைக் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”குறட்டையால் இதய நோய் ஏற்பட அதிக வாய்ப்பு” : மருத்துவர் ப.விஜயகிருஷ்ணன்
”ஓபிஎஸ் இரட்டை இலையை பயன்படுத்த தடை தொடரும்” : உயர்நீதிமன்றம் உத்தரவு!