நாடாளுமன்ற மக்களவையில் வண்ண வெடிகுண்டு வீசி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை பாதுகாப்பு அதிகாரிகள் இன்று (டிசம்பர் 13) கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணையானது நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் எழுப்பி வருகின்றனர்.
திமுக தலைவர் ஸ்டாலின்
நாடாளுமன்றத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்புக் குறைபாடுகள், நமது ஜனநாயகக் கோவிலுக்கு ஆபத்தான அச்சுறுத்தலாக உள்ளது.
தாமதமின்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்கால தவறுகளை சரிசெய்ய உடனடி விசாரணையைத் தொடங்கவும். நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்குள் கண்ணீர் புகைக் குண்டுகளுடன் அத்துமீறி இருவர் நுழைந்ததற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்றதன் நினைவு தினமான இதே நாளில் இத்தகைய சம்பவம் நடந்திருப்பது வேதனைக்குரியது.
இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துவதுடன், இந்திய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை உடனடியாக வலிமைப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி
2001 இல் நடந்த பாராளுமன்றத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்த அந்த சம்பவத்தின் நினைவு நாளான இன்று இத்தகைய சம்பவம் நடந்திருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது.
புதிய நாடாளுமன்றத்தில் இத்தகைய பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தான் பொறுப்பேற்க வேண்டும். இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் பின்னணி குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
ஏனெனில் இவர்களை பாராளுமன்றத்திற்குள் அனுமதிக்க பரிந்துரை செய்தவர் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர். அவரையும் இதுகுறித்து விசாரித்து உண்மை நிலையை கண்டறிய வேண்டும்.
பாமக தலைவர் ராமதாஸ்
மக்களவையில் வண்ணப்புகைத் தாக்குதல் கவலையளிக்கிறது. நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக் கூறுகள் குறித்து தணிக்கை, ஊடுருவல் குறித்து விசாரணை தேவை.
நாடாளுமன்றத்துக்குள் வண்ணப்புகைக் குப்பிகளுடன் நுழைய முடியும் போது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் ஆகியவற்றுடன் ஏன் நுழைய முடியாது? என்பது தான் முதன்மையான வினா ஆகும்.
புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறக்கப்பட்ட 3 மாதங்களுக்குள் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், இது குறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிடப்பட வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
நாடாளுமன்ற மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து மக்கள் பிரதிநிதிகள் மீது புகைகள் கக்கும் கருவியை வீசியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கடந்த 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் இந்நாளில் 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இன்று நடைபெற்றிருக்கும் பாதுகாப்பு மீறல் சம்பவம் மக்கள் பிரதிதிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
பன்னடுக்கு பாதுகாப்பு கட்டமைப்பு கொண்ட நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்வதோடு, நாடாளுமன்றம் முழுவதும் மக்கள் பிரதிநிதிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
பாஜக தலைவர் அண்ணாமலை
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக வண்ண குண்டு வீச்சு நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இதனை அரசியலாக்க வேண்டிய தேவையில்லை.
நாடாளுமன்ற பாதுகாப்பு சபாநாயகரின் கட்டுப்பாட்டில் உள்ளது. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குண்டு வீச்சுக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு சம்பந்தமில்லை.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நாடாளுமன்ற தாக்குதலில் நீலம் பங்கேற்றது ஏன்? – சகோதரர் பேட்டி!
தமிழ்நாடு அரசு வழக்கு : ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!