நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் யாருக்கு வாய்ப்பு என்ற கேள்வி கட்சிகளுக்குள் தீவிரமாக இருக்கிறது.
மயிலாடுதுறை தொகுதி இப்போது திமுக வசம் இருக்கிறது. ராமலிங்கம் எம்பியாக இருக்கிறார். மீண்டும் இத்தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என்று அக்கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் மயிலாடுதுறை தொகுதியை தொடர்ந்து வற்புறுத்திக் கேட்டு வருகிறார்கள்.

தமிழக காங்கிரஸ் தலைவரான செல்வப்பெருந்தகை தான் தலைவரானதும் காஞ்சிபுரம், கன்னியாகுமரியை அடுத்து மயிலாடுதுறைக்குதான் செயல்வீரர்கள் கூட்டத்துக்கு வருகை தந்துள்ளார். அதனால் மயிலாடுதுறை தொகுதியை காங்கிரஸ் வற்புறுத்தி கேட்டு வருகிறது.

காங்கிரஸ் சார்பில் அகில இந்திய ப்ரஃபஷனல் காங்கிரஸ் தலைவர் ப்ரவீன் சக்கர்வர்த்தி நிறுத்தப்படலாம் என்று பேச்சிருக்கிறது.
அதேநேரம் மயிலாடுதுறை தொகுதியில் இஸ்லாமியர்கள் பரவலாக இருக்கும் நிலையில் காங்கிரசின் மாநில செயலாளர் நாகூர் நௌஷத்தும் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.

அதிமுகவில் பலர் விருப்பமனு கொடுத்திருந்தாலும் மயிலாடுதுறை தொகுதியை மனித நேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரிக்கு கொடுக்கலாம் என்று கருதி வருகிறது அதிமுக. அன்சாரி மயிலாடுதுறை தொதியில் வேலையைத் தொடங்கிவிட்டார்.

அதிமுகவின் இன்னொரு கூட்டணிக் கட்சியான எஸ்டிபிஐயும் கேட்கிறது. பாஜகவில் மாவட்டத் தலைவர் அகோரம் தீவிரமாக முயற்சித்தார். ஆனால், அவர் தற்போது தர்மபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் தலைமறைவாகிவிட்டார்.
அதனால் தற்போது அவர் தேர்தலில் நிற்க வாய்ப்பில்லை. இந்த நிலையில் மிகவும் டீசன்ட்டான புள்ளியாக திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம் பகுதிகளில் அறியப்பட்ட நாராயணி நிதி நிறுவன அதிபரான எஸ்.கார்த்திகேயன் மயிலாடுதுறை வேட்பாளராக பாஜக சார்பில் நிறுத்தப்படலாம் என்று பேசப்படுகிறது.
2006 முதல் பாஜகவில் இருக்கும் கார்த்திகேயன் இப்போது மாநில சிந்தனையாளர் பிரிவின் துணைத் தலைவராக இருக்கிறார்.

நாராயணி நிதி நிறுவனத்தின் நிறுவனரான கார்த்திகேயன், கும்பகோணம் கார்த்திக் சினிமாஸ் உரிமையாளராகவும் இருக்கிறார். இதுமட்டுமல்லாமல்…. திருவாரூர் குளோபல் கல்லூரி, ஓரியன்டல் பள்ளி போன்ற கல்வி நிறுவனங்களிலும் முக்கியப் பங்காற்றி வருகிறார். பாஜகவுக்கு தஞ்சாவூரில் சொந்த அலுவலகம் கட்டியதில் பெரும்பங்காற்றியது கார்த்திகேயன் தான்.
மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர் வட்டாரங்களில் புகழ்பெற்ற கார்த்திகேயன் கொரோனா காலங்களில் இப்பகுதி மக்களுக்கு பெருமளவில் உதவி செய்தவர்.
எவ்வித சர்ச்சைகளுக்கும் ஆட்படாத கார்த்திகேயன் பெயர் வேட்பாளர் பட்டியலில் டெல்லி வரை சென்றிருக்கிறது. இதுதான் மயிலாடுதுறை தொகுதியின் தற்போதைய தட்ப வெப்பம்!
-வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புதுச்சேரி சிறுமியின் உடல் நல்லடக்கம்!
GOLD RATE: தாறுமாறாக உயரும் தங்கம்… நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!