நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். தொகுதிப் பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தையில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 16 முதல் 18 வரை திமுக சார்பில் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (பிப்ரவரி 10) அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக அரசின் பத்தாண்டு கால முறையற்ற நிர்வாகம், மக்களின் குறைகள், துன்பங்களை நேரடியாகக் கேட்டறிந்திட திமுக நிர்வாகிகள் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரையில் பங்கேற்று அதிமுகவை மக்கள் நிராகரிப்பதற்கான அடித்தளமிட்டனர்.
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் 2024-இல் கடந்த பத்தாண்டு காலத்தில் மத்திய பாஜக அரசு, தமிழ்நாட்டிற்கு இழைத்த அநீதிகளையும், அதிமுகவின் துரோகங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், முதற்கட்டமாக, திமுகவினர் “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதி வாரியான கூட்டங்களில் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளனர்.
தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க முதல்வர் ஸ்டாலின் குரலாக பிப்ரவரி 16,17 மற்றும் 18 ஆகிய நாட்களில் நடைபெறும் பரப்புரைக் கூட்டங்களை பொறுப்பு அமைச்சர்களுடன் இணைந்து, நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணியினர் பூத் கமிட்டியினர் ஆகியோர் பங்கேற்கும் கூட்டங்களாக நடத்திட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர், கிருஷ்ணகிரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், தஞ்சாவூர், திருச்சியில் பொருளாளர் டி.ஆர்.பாலு, பெரம்பலூர், அரக்கோணம் திமுக துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி, திருப்பூர் முதன்மை செயலாளர் கே.என்.நேரு பங்கேற்கின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை”: இறுதியாக சொன்ன எடப்பாடி
இடிக்கப்பட்ட தீண்டாமைச் சுவர்: ஏன்? யாரால் தெரியுமா?