நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி: எடப்பாடி சொன்ன முக்கிய தகவல்!

அரசியல்

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாமக்கல் மாவட்டத்தில் பேசியுள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 51ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நாமக்கல் மாவட்டத்தில் இன்று (நவம்பர் 6) நடைபெற்றது.

இதில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், “அதிமுக மூன்று நான்கு பிரிவுகளாக உடைந்திருக்கிறது என்று ஸ்டாலின் கூறுகிறார். அவர் இந்த நிகழ்ச்சியை டிவியில் பார்த்துக் கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். இந்த கட்சி ஒன்றாகத் தான் இருக்கிறது. அதற்கு இந்த நாமக்கல் கூட்டமே சாட்சி” என்று கூறினார்.

ஓபிஎஸ் திமுகவுக்கு பி டீமாக இருக்கிறார் என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, “எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு இந்த இயக்கம் அழிந்துவிடும், சிதறிவிடும் என்று கனவு கண்டார்கள்.

அந்த கனவையெல்லாம் தவிடுபொடியாக்கி மறைந்த முதல்வர் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆட்சியைத் தமிழ்நாட்டில் மீண்டும் நிலைநாட்டிக் காட்டினார்.

சதிகாரர்கள் எவ்வளவு சதி செய்தாலும் அந்த துன்பங்களை எல்லாம் தாங்கிக்கொண்டு, நமக்கெல்லாம் இன்பம் தந்தவர்தான் ஜெயலலிதா. அவர்மீது பல்வேறு வழக்குகள் தொடர்ந்தார்கள்.

தற்போது எப்படி முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு தொடர்ந்தார்களோ, அதேபோல வழக்கு தொடர்ந்தார்கள்.

அதிமுகவை எதிர்க்க முடியாமல் திமுக தற்போது வழக்கு போட்டுக்கொண்டிருக்கிறது. அதிமுகவை எதிர்க்கத் தெம்பு, திராணி இல்லாத கட்சி திமுக. அரசியல் ரீதியாக நம்மை அவர்கள் எதிர்கொள்ள முடியாது.

எங்கள் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மீது எத்தனை வழக்குப் போட்டாலும் அத்தனையையும் தவிடுபொடியாக்கி மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும். அதிமுக காற்று போன்றது அதற்குத் தடை கிடையாது.

அதிமுகவில் செல்வாக்கு குறைந்துவிட்டதாக சொல்கிறார்கள். ஊடகத்தை மிரட்டி இதுபோன்று செய்தியைப் பரப்பி வருகிறார்கள்.

அடுத்து வருகிற எந்த தேர்தலாக இருந்தாலும் அதிமுகதான் வெற்றி பெறும். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப் பெரிய மெகா கூட்டணி அமைக்கப்படும்.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிள்ளையார் சுழி போடுகின்ற கூட்டமாக இந்த கூட்டம் அமைந்துள்ளது. நாமக்கல்லில் இருந்து 2024 தேர்தலில் அதிமுக சார்பில் யார் போட்டியிட்டாலும் அவர்தான் வெற்றிபெறுவார்.

நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அப்போது திமுகவுக்கு மக்கள் தக்க பதில் கொடுப்பார்கள்” என்று கூறினார்.

பிரியா

லவ் டுடே – விமர்சனம்!

கோவை வழக்கில் ஆதாரங்கள் அழிப்பு : மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *