புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைக்க மக்களவை செயலகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மே 28-ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணித்துள்ளன.
இந்தநிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைக்க மக்களவை செயலகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெயா சுதீன் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் “இந்தியாவின் முதல் குடிமகன் மற்றும் நாடாளுமன்றத்தின் தலைவர் குடியரசு தலைவர் தான். நாட்டின் முக்கிய முடிவுகளை எடுக்க கூடிய அதிகாரம் அவருக்கு உள்ளது. குடியரசு தலைவர் நாடாளுமன்றத்தின் ஓர் முக்கிய அங்கம். புதிய நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழாவில் திரவுபதி முர்மு ஏன் ஓரங்கட்டப்பட்டார். குடியரசு தலைவரை புதிய நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழாவிற்கு அழைக்கவில்லை. மத்திய அரசின் இந்த நடவடிக்கை பொருத்தமற்ற செயலாகும். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு திறக்க மக்களவை செயலகத்திற்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வம்
12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!
’ஜப்பான் மேட் இன் இந்தியா’: படக்குழு வெளியிட்ட அறிமுக வீடியோ!