ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் இன்று (ஜனவரி 31) பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்க உள்ளது. குடியரசு தலைவராக பொறுப்பேற்ற பின்பு திரவுபதி முர்மு முதல்முறையாக நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார்.
மக்களவை, மாநிலங்களவையின் மைய கட்டடத்தில் இன்று கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
2023-24 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார்.
நாளை 2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது நிதியமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் ஐந்தாவது பட்ஜெட்டாகும்.
நாகலாந்து, திரிபுரா, மேகாலயா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அந்த மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வருமான வரி விலக்கு உச்சவரம்பு குறித்தும் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்று முதல் பிப்ரவரி 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாம் அமர்வானது மார்ச் 13-ஆம் தேதி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
மோடி பிபிசி ஆவணப்படம், ஆதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பெர்க் வெளியிட்ட ஆராய்ச்சி அறிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், திரிணாமுல், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி குடியரசு தலைவர் உரையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.
பிப்ரவரி 2-ஆம் தேதி குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற உள்ளது.
செல்வம்
நண்பகல் நேரத்து மயக்கம் : தமிழர்களுக்கான பெருமிதம்!
விழிப்புணர்வு வீடியோக்கள்: டிவி சேனல்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்!