முழுமையாக முடங்கிய நாடாளுமன்றம்: காங்கிரஸ் பேரணி!

அரசியல் இந்தியா

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு முழுவதுமாக முடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று (ஏப்ரல் 6) பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கியது. அப்போது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் லண்டனில் ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மதியம் 2 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

அதன்பின்னர் தொடங்கிய நாடாளுமன்ற அவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அதானி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார்.

ஆனால் பாஜக எம்பிக்கள் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டனர். இவ்வாறு எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி எம்பிக்களின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

அது முதல் ஒத்திவைக்கப்பட்ட இரு அவைகளும் நாள்தோறும் தொடங்குவதும் முடங்குவதுமாக இருந்து வந்தது.

இதனிடையே ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பெயர் குறித்துப் பேசிய அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இது பெரும் விவாதங்களை ஏற்படுத்திய நிலையில், ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதானி விவகாரத்தை திசை திருப்புவதற்காகத் தான் ஆளுங்கட்சி ராகுல் காந்தியைத் தகுதி நீக்கம் செய்தது என்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 6) நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வின் கடைசி நாள் கூட்டம் நடைபெற்றது.

அவை இன்று தொடங்கியதும் வழக்கம் போல் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தொடர் நாடாளுமன்ற முடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் மூவர்ணக் கொடியை ஏந்தி பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து விஜய் சோக் பகுதி வரை ’ஜனநாயகத்தை காப்பாற்றக் கோரி’ இந்த பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற அவைகளின் தொடர் முடக்கத்திற்குத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மோனிஷா

குளத்தில் மூழ்கி 5 பேர் பலி: சட்டமன்றத்தில் வேண்டுகோள் வைத்த சேகர்பாபு

நாட்டிய வகுப்பில் ஹரிபத்மனின் அழிச்சாட்டியம்! – மாணவிகளின் அதிர வைக்கும் வாக்குமூலம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *