எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை மாநிலங்களவை இன்று (மார்ச் 15) மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாவது அமர்வு கடந்த மார்ச் 13-ஆம் தேதி துவங்கியது.
கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாள் ராகுல் காந்தி லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
நேற்று அதானி குழுமத்தின் முறைகேடுகள் குறித்து ஹிண்டன்பெர்க் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பினர்.
இந்தநிலையில் மூன்றாவது நாளான இன்றும் அதானி குழுமம் முறைகேடுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் மக்களவை மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதானி குழுமம் குறித்து புகார் அளிக்க அமலாக்கத்துறை நோக்கி பேரணி செல்ல முடிவு செய்துள்ளனர்.
செல்வம்