மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
கூட்டத்தொடர் ஆரம்பமான முதல்நாள் முதல் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் கடந்த 7 நாட்களும் விவாதம் நடத்த இயலாமல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியுள்ளது.
இந்த நிலையில் 8-வது நாளான இன்று (ஜூலை 31) காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடின.
மக்களவைத் தொடங்கியதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து பதாகைகளை ஏந்திய படி “மணிப்பூர்…”, “மணிப்பூர்…” என மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
இந்த அமளி காரணமாக மக்களவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையில் அவை நடவடிக்கைத் தொடங்கியதும் பேசிய பியூஸ் கோயல், ”மணிப்பூர் விவாகரம் தொடர்பாக அரசு விவாதம் நடத்த தயார். ஆனால் எதிர்க்கட்சிகள் விவாதத்தில் பங்கேற்காமல் ஏன் ஓடுகின்றனர்?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த மாநிலங்களை எதிர்க்கட்சிகளின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,
”யாரும் ஓடவில்லை. இன்று அவை நடவடிக்கைகளை முழுவதுமாக ஒத்தி வைத்துவிட்டு, மணிப்பூர் குறித்து விதி 267-ன் கீழ் விரிவான விவாதம் நடைபெற வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் பதில் அளிக்க வேண்டும்” என்று கோரினார்.
அதற்கு பியூஸ் கோயல், “மதியம் 2 மணிக்கு விதி 267-க்கு பதிலாக விதி 176-ன் கீழ் குறுகிய கால விவாதம் நடத்த அரசு தயாராக இருக்கிறது” என்று தெரிவித்தார்.
அதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அதனையடுத்து மாநிலங்களவையும் மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
கிறிஸ்டோபர் ஜெமா
வசூலிலும் கல்லா கட்டும் டிடி ரிட்ட்ர்னஸ்: முதல் வார ரிப்போர்ட்!
வேட்டையனாக ராகவா லாரன்ஸ்: சந்திரமுகி 2 ஃபர்ஸ்ட் லுக்!