நம்பிக்கையில்லா தீர்மானம்: மக்களவையில் இன்று இரண்டாவது நாளாக விவாதம்!

Published On:

| By Selvam

parliament bjp india alliance

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று இரண்டாவது நாளாக விவாதம் நடைபெற உள்ளது.

மணிப்பூர் கலவரம் குறித்து மக்களவையில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று துவங்கியது. இந்த விவாதத்தின் போது பேசிய காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகாய், “மணிப்பூருக்கு பிரதமர் மோடி ஏன் செல்லவில்லை. 80 நாட்களுக்கு பிறகு மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார். மணிப்பூர் முதல்வர் பிரன்சிங்கை ஏன் பதவிநீக்கம் செய்யவில்லை” என்று கேள்விகளை எழுப்பினார்.

இந்தியா கூட்டணியில் உள்ள திமுக, திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்த பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே “இது மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இல்லை. இந்தியா கூட்டணி எம்.பிக்கள் தங்கள் நம்பிக்கையை சோதித்து பார்ப்பதற்கான நம்பிக்கையில்லா தீர்மானம்” என்று பேசினார். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான முதல் நாள் விவாதம் நிறைவடைந்த நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது நாள் விவாதத்தின் போது காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பேச உள்ளார். அதனை தொடர்ந்து வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை என்றாலும் பிரதமர் மோடியை மணிப்பூர் விவகாரம் குறித்து பேச வைப்பதற்காகவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததாக காங்கிரஸ் கட்சி கேரள எம்.பி சுரேஷ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

ஜெயிலர் ரிலீஸ்: இமயமலை புறப்பட்டார் ரஜினி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடைதிறப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment