நாடாளுமன்ற தாக்குதல் : அடிபடும் பாஜக எம்.பி பெயர் – யார் இந்த பிரதாப் சிம்ஹா?

அரசியல் இந்தியா

மக்களவையில் அத்துமீறி நுழைந்தவர்களில் ஒருவர் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பரிந்துரையில் வந்தது தொடர்பான பாஸ் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று (டிசம்பர் 13) வழக்கம் போல் மக்களவை, மாநிலங்களவை கூடியது.

அப்போது நேரமில்லா நேரத்தில் மக்களவையின் public gallery எனப்படும் பார்வையாளர்கள் கூடத்தில் இருந்து இருவர் அவைக்குள் குதித்துள்ளனர்.

அவர்கள் தங்கள் கையில் வைத்திருந்த  வண்ணப்புகைக் குப்பிகளை வீசினர். அதில் இருந்து மஞ்சள் கலரில் புகை வெளியே வந்தது. இருவரில் ஒருவர் எம்.பி.க்களின் மேஜைகளில் ஏறி தாவி குதித்த வீடியோவும் வெளியானது. அவர்களை எம்.பி.க்களே பிடித்து பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

மக்களவைக்குள் அத்துமீறி புகுந்தது சாகர் ஷர்மா மற்றும் மனோரஞ்சன் என்பது தெரியவந்தது. அவர்களிடம் தற்போது புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

“அதிகாரிகள் இவர்களின் பின்னணி குறித்து விசாரித்து வருகின்றனர். சாகர் ஷர்மா மைசூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். பெங்களூரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் படித்து வருகிறார். மற்றொரு நபரும் மைசூரைச் சேர்ந்தவர்” என்று விசாரணை அதிகாரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்துக்கு வெளியே அவர்களுக்கு ஆதரவாக முழக்கமிட்ட நீலம், அமோல் ஷிண்டே ஆகிய இரண்டு பெண்களையும் டெல்லி காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாடாளுமன்றத்துக்கு டெல்லி காவல் ஆணையர், தடயவியல் நிபுணர்கள் வந்து ஆய்வு செய்தனர்.

இந்த சம்பவத்தில் பார்வையாளர் மாடத்துக்கு வந்து அமர யார் பாஸ் வழங்கியது என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருக்கிறது.

இதுகுறித்து மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பகுஜன் சமாஜ்வாதி கட்சி எம்.பி., டேனிஷ் அலி தனது எக்ஸ் பக்கத்தில், “21 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நாடாளுமன்றத் தாக்குதலை நினைவுப்படுத்தும் வகையில் பார்வையாளர்கள் கேலரியில் இருந்து மக்களவையில் எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் ஒருவர் குதித்தார். இதுபோன்ற நிகழ்வு எம்.பி.க்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த பக்கத்தில், இரு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். அதில் ஒன்றில் சாகர் ஷர்மா ஆதார் கார்டு மற்றும்  பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் பாஸ் உள்ளது.

அந்த பாஸில் மைசூரு மக்களவை பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பெயர் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் பிரதாப் சிம்ஹாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

யார் இந்த பிரதாப் சிம்ஹா?

பிரதாப் சிம்ஹா மைசூரு குடகு தொகுதியில் இருந்து போட்டியிட்டு 2014 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இரண்டாவது முறையாக 2019 தேர்தலிலும் போட்டியிட்டு எம்.பி.ஆனார்.

பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர் “விஜய கர்நாடகா” செய்தி சேனலில் பணியாற்றியிருக்கிறார். இந்துத்துவா கருத்துக்களை முன்வைத்து, அதை விமர்சிப்பவர்களை தாக்கி எழுதி வந்துள்ளார்.

2008ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது  புத்தகம் எழுதினார். இதனால் பிரதமர் மோடிக்கு நன்கு அறியப்பட்டவராக மாறினார். சிம்ஹா பாஜக தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷுக்கு நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பரில், கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்தபோது, ​​மைசூர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் ரூ.5 முதல் 6 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாகவும், உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும்  கூறியிருந்தார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் காங்கிரஸிடம் பாஜக தோல்வியடைந்த பிறகு, முன்னாள் முதல்வர்கள் பி.எஸ். எடியூரப்பா மற்றும் பசவராஜ் பொம்மையின் கீழ் உள்ள பாஜக அரசாங்கம் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது ”ஒருவித புரிதல்” அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சிம்ஹா குற்றம்சாட்டினார். இது கர்நாடக பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், 2017ஆம் ஆண்டு அவரிடம் மன்னிப்பு கேட்டார்.

இவ்வாறு சர்ச்சைகளில் சிக்கி வந்த பிரதாப் சிம்ஹாவின் பெயர் தற்போது நாடாளுமன்ற தாக்குதல் விவகாரத்தில் அடிபட்டுள்ளது. மக்களவைக்குள் புகுந்தவர்களில் ஒருவரான மனோரஞ்சன், சாகர் ஷர்மாவை தனது நண்பர் என கூறிக்கொண்டு மூன்று மாதமாக பிரதாப் சிம்ஹாவின் அலுவலகத்துக்கு சென்று வந்ததாக விசாரணை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக விசாரணை நடந்துவருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

PKL10: தெலுங்கு டைட்டன்ஸுடன் பலப்பரீட்சை… அவரு மட்டும் வேணாம் அலறும் ரசிகர்கள்!

கொள்முதல் விலை : பால் உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

 

+1
0
+1
0
+1
3
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *