மீண்டும் கள்ளக்குறிச்சி: அதிமுகவோடு சேர்ந்து பாரிவேந்தர் போடும் ’உடையார்’ ஸ்கெட்ச்!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தங்கள் ஆங்காங்கே தொடங்கிவிட்டன. ’அதிமுக தலைமையில்தான் மெகா கூட்டணி அமையும்’ என்று சில தினங்களுக்கு முன் நாமக்கல்லில் நடந்த அதிமுகவின் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார்.

இதற்கு ரியாக்ட் செய்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், ‘அதிமுகதான் பெரிய கட்சி. அவர்கள் தலைமையில் கூட்டணி என்பது இயல்பானதுதான்’ என்று பதிலளித்திருந்தார்.

இந்தப் பின்னணியில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக, அமமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போதைய எம்.பி.க்கள் சிலர் கூட்டணி மாறியும், தொகுதி மாறியும் நிற்பதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

அவர்களில் ஒருவர்தான் ஐஜேகே கட்சியின் நிறுவனரும், தற்போதைய பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு ஜெயித்தவருமான பச்சமுத்து என்கிற பாரிவேந்தர்.

இவர் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் முதலில் கள்ளக்குறிச்சி தொகுதியில்தான் நிற்பதாக இருந்தது. ஆனால் கடைசி கட்டத்தில் கள்ளக்குறிச்சி எம்.பி. தொகுதியில் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து பெரம்பலூரில் நிற்க வைக்கப்பட்டார் பாரிவேந்தர்.

முதலில் கள்ளக்குறிச்சி தொகுதிதான் பாரிவேந்தருக்கு என உறுதியான நிலையில், அப்போது பொன்முடி தனது மகன் கௌதம சிகாமணிக்காக உதயநிதி, சபரீசன் ஆகியோர் மூலம் பலத்த அழுத்தம் கொடுத்து கள்ளக்குறிச்சி தொகுதியை தனது மகனுக்கே பெற்றார்.

இதையடுத்து வேறு வழியின்றி பெரம்பலூர் மக்களவை தொகுதியை பெற்றுக் கொண்டார் பாரிவேந்தர். பெரம்பலூரை விட கள்ளக்குறிச்சியில் அதிக உடையார் சமுதாய வாக்குகள் உள்ளன என்று கருதி 2019க்கு முன்பிருந்தே அவர் கள்ளக்குறிச்சி தொகுதியை குறிவைத்து வேலை செய்து வந்தார். ஆனாலும் கடைசி நேர ட்விட்ஸ்டில் பெரம்பலூரில் நின்று திமுகவின் ஒத்துழைப்பால் வெற்றிபெற்றார்.

ஆனால் வெற்றிபெற்ற பிறகு அவர் திமுக எம்பியாகவோ திமுகவின் கூட்டணிக் கட்சி எம்பியாகவோ நடந்துகொள்ளவே இல்லை. மாறாக அரசியல் அரங்கில் திமுகவின் நேரடி எதிர் முகாமான பாஜகவுடன் தான் நட்பு பாராட்டி வந்தார் பாரிவேந்தார்.

பிரதமர் மோடியை தனியாக சென்று சந்தித்தார். பாஜகவின் சட்டமன்றத் தேர்தல் வெற்றிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். இன்னும் ஒரு படி மேலே போய் மோடி மகாத்மா காந்தியை போன்றவர் என்றெல்லாம் புகழ்ந்தார் பாரிவேந்தர். ஆனாலும் திமுக இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

‘பாஜக மேலிடம் நெருக்கடி கொடுத்து அவரது பிசினஸுக்கு பாதிப்பு ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். அதனால்தான் இந்த நிலை’ என்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வேந்தருக்கு நெருக்கமானவர்கள் கூறிவிட்டதால் ஸ்டாலின் இதை கண்டுகொள்ளவில்லை என்று அறிவாலய வட்டாரத்திலேயே கூறினார்கள்.

இந்த நிலையில்தான் வரும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் பெரம்பலூரில் நின்றாலும் வெற்றி வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த பாரிவேந்தர், தனது பார்வையை மீண்டும் கள்ளக்குறிச்சி நோக்கி திருப்பியிருக்கிறார்.

கடந்த நவம்பர் 6 ஆம் தேதி அதிமுக கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் குமரகுருவின் அழைப்பின் பேரில் உளுந்தூர்பேட்டைக்கு வருகை தந்தார் பாரிவேந்தார். திமுக எம்பியான பாரிவேந்தரை பொன்னாடை போர்த்தி, பழக்கூடை கொடுத்து கட்டி பிடித்து வரவேற்றார் அதிமுக மாசெ.

ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் திருப்பதி தேவஸ்தான போர்டு மெம்பராக இருந்தவர் குமரகுரு. இப்போது கௌரவ உறுப்பினராக இருக்கிறார். குமரகுரு உளுந்தூர் பேட்டை பைபாஸ் அருகே பிரம்மாண்டமான முறையில் திருப்பதி வெங்கடசாலபதி பெருமாள் கோயிலை கட்டிக் கொண்டிருக்கிறார். இதற்கான பூமி பூஜைக்கு எடப்பாடி பழனிசாமி வந்திருந்தார். எடப்பாடி பழனிசாமியும் குமரகுருவும் மிகவும் நெருக்கமானவர்கள்.

இந்த நிலையில்தான் கடந்த நவம்பர் 6 ஆம் தேதி குமரகுருவின் அழைப்பின் பேரில் உளுந்தூர்பேட்டை வெங்கடாசலபதி கோயில் கட்டுமானம் நடைபெறும் பகுதிக்கு வந்தார் பெரம்பலூர் திமுக எம்பியான பாரிவேந்தர். அவரை முன்னாள் எம்.எல்.ஏ.வும் கள்ளக்குறிச்சி அதிமுக மாசெவுமான குமரகுரு வரவேற்று கோயில் கட்டுமானப் பணிகளை சுற்றிக் காட்டினார். மேலும் கோயிலின் மேப்பை காட்டியும் விளக்கினார்.

புதிதாக கட்டப்படும் இந்த திருப்பதி வெங்கடாசலபதி கோயிலிலில் பாரிவேந்தரின் பங்கேற்பும் இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார் குமரகுரு. இதையடுத்து மண்டபம் கட்டுவதற்கு 5 கோடி வரையில் தருவதாக பாரிவேந்தர் ஒப்புக் கொண்டிருப்பதாக ஐஜேகே வட்டாரத்தினர் தெரிவிக்கிறார்கள்.

இந்த விசிட்டின் மூலம் கள்ளக்குறிச்சி எம்பி தொகுதியை நோக்கி மீண்டும் தனது ஸ்கெட்சை தீட்டத் தொடங்கியிருக்கிறார் பாரிவேந்தர். இது தொடர்பாக கள்ளக்குறிச்சி ஐஜேகே வட்டாரத்தில் பேசினோம்.

“திமுகவால் கள்ளக்குறிச்சியில் 2019 இல் விட்டதை இப்போது அதிமுக, பாஜக மூலம் பெற நினைக்கிறார் பாரிவேந்தர். கள்ளக்குறிச்சி எம்பி தொகுதியில் ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய கள்ளக்குறிச்சி மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளும் ஆத்தூர், ஏற்காடு, கெங்கவல்லி ஆகிய சேலம் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளும் அடங்கியுள்ளன. இந்த ஆறு தொகுதிகளிலும் உடையார் சமுதாய மக்கள் அதிகம் இருக்கிறார்கள். இவர்களை நம்பியும் அதிமுக-பாஜக கூட்டணி பலத்திலும் வெற்றிபெறலாம் என்று நினைக்கிறார் பாரிவேந்தர். அவரோ அவரது மகன் ரவியோ போட்டியிடுவார்கள். அதனால்தான் கள்ளக்குறிச்சி அதிமுக மாசெ குமரகுருவின் அழைப்பின் பேரில் வெங்கடாஜலபதி கோயில் பணியை பார்வையிட வந்து முக்கிய ஆலோசனையும் நடத்தியிருக்கிறார்” என்கிறார்கள்.

திமுகவிலும் கள்ளக்குறிச்சி தெற்கு மாசெ வசந்தம் கார்த்திகேயன், சேலம் கிழக்கு மாசெ சிவலிங்கம் ஆகிய உடையார் சமுதாய மாசெக்கள் கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குள் பலமாக இருக்கிறார்கள். இவர்கள் இப்போதே ஐஜேகேவில் வேந்தருக்கு நெருக்கமாக இருக்கும் சிலரை திமுகவுக்குக் கொண்டுவரும் ஆபரேஷனுக்கு தயாராகிவிட்டனர்.

ஆரா

பிரதமர் வருகை: திடீர் ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர்!

அரட்டை அடிக்க ஒப்பந்தம்: திருமணத்தில் நடந்த ருசிகரம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts